மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மாற்றப்பட்டு, ஆண்டுக்கு 125 நாள் வேலை வழங்கும் விபிஜி ராம்ஜி புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த திட்டம் கிராமங்களில் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என குற்றம்சாட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.மத்திய அரசு புதிய திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை வழங்கப்படும் என்றும், மாநில அரசும் 40 சதவீத நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால், நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல கிராமங்களில் ஒரு வார்டுக்கு 20 முதல் 30 நபர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. பெரும்பாலான மக்கள் விவசாயத்தை சார்ந்துள்ள நிலையில், விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், 125 நாள் வேலை திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி, வாய்க்கால், குளங்கள் போன்ற பொதுப்பணிகளில் கிராமங்களில் உள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் எனக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கீழையூர் ஒன்றியக்குழு சார்பில் வாழக்கரை மெயின் ரோட்டில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு கட்சியின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான டி.செல்வம் தலைமையேற்றார். இதில் ஒன்றிய துணை செயலாளர் ஜி.சங்கர், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் வீ.சுப்பிரமணியன், கட்சியின் ஒன்றிய பொருளாளர் எம்.பர்ணபாஸ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் எஸ்.பக்கிரிசாமி, ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் டி.சந்திரகாசன், கிளைச் செயலாளர் தினேஷ், முன்னாள் வார்டு உறுப்பினர் மணிமேகலை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்த கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செபஸ்தியம்மாள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இந்த பிரச்சினையை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று, வரும் வாரத்திலிருந்து ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒருவருக்காவது வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்கான ஊதியம் முறையாக வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.அதனைத் தொடர்ந்து, அதிகாரிகளின் உறுதியை ஏற்று போராட்டக்காரர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்




0 Comments