தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன்நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.13.30 இலட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, சில்வார்பட்டி ஊராட்சியில் ரூ.31.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டிடம், அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு கூடுதல் வகுப்பறைக் கட்டிடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து டி.வாடிபட்டி ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ரூ.5.80 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடத்தின் வடக்கு நோக்கிய முகப்புப்பகுதி மற்றும் ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டில் தெற்கு நோக்கிய முகப்புப்பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், எண்டப்புளி ஊராட்சியில் ரூ.17.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு, பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
பின்னர், ஜல்லிப்பட்டி ஊராட்சியில் ரூ.11.60 இலட்சம் மதிப்பீட்டிலும், வடபுதுப்பட்டி ஊராட்சியில் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டிலும் நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், திருமதி புவனேஷ்வரி, உதவிபொறியாளர் அஜய்குமார், சில்வார் பட்டி ஊராட்சி செயலர் பிச்சைமணி, வடபுதுப் பட்டி ஊராட்சி செயலர் மணிகண்டன், ஜல்லிபட்டி ஊராட்சி செயலர் பாண்டியராஜ், எண்டப்புளி ஊராட்சி செயலர் ஜெயபாண்டியன், பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி செயலர் சாகுல் ஹமீது உட்பட அரசு அலுவலர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் பிரகலாதன், முத்துராமலிங்கம் உள்பட பலர் உடனிருந்தனர்.



0 Comments