நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் சோழவித்தியாபுரத்தில் உள்ள புனித சந்தன மாதா ஆலயத்தில் ஆண்டு திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
மாலை 6.30 மணியளவில் இன்னிசை வாத்தியங்கள் முழங்க, வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் புனித சந்தன மாதாவின் திருக்கொடி பக்தி பவனியாக திருத்தல வளாகத்திலிருந்து புறப்பட்டு கொடிமரத்தை வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து திருவிழாவின் தொடக்க நிகழ்வாக கொடியேற்றும் திருச்சடங்கு மற்றும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. புனித சந்தன மாதாவின் அருளைப் பெற ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பக்திபூர்வமாக வழிபட்டனர்.
திருத்தலத் தந்தை எஸ். டேவிட் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நாகை மறை மாவட்ட அதிபர் ஜி.வீ. பன்னீர்செல்வம் திருப்பலி நிறைவேற்றி கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்வில் சமுதாயத் தலைவர் வீ. சுந்தர்ராஜன், முன்னாள் ஊராட்சி தலைவர் கோமதி தமிழ்செல்வம், சமுதாய நிர்வாகிகள், புனித அன்னாள் லூசன் சபை அருட்சகோதரிகள், நிர்வாக குழுவினர் மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவ சமூக இறை மக்கள் உள்ளிட்ட சோழவித்தியாபுரம் கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

0 Comments