திருவாடானை அருகே​ நரிக்குறவர் மக்களுக்கு வீடுகள் கட்டித் தராமல் அதிகாரிகளின் அலட்சியம்..... கட்டி முடிக்கப்படாத வீடுகளுக்கும் 'பில்' எடுத்ததாகக் குற்றச்சாட்டு......



ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா திருவாடானை சமத்துவபுரம் அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின்கீழ் 17 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

​இதில் பெரும் அதிர்ச்சியாக, சில வீடுகள் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டதாகக் கணக்குக் காண்பிக்கப்பட்டு, அதற்கான பணமும் (பில்) எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கள நிலவரப்படி வீடுகளின் முகப்புப் பகுதி மட்டுமே கட்டப்பட்டுள்ளது. பின்புறம் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகள் பூசப்படாமல் அரைகுறையாகக் காட்சியளிக்கின்றன. மேலும், வீடுகளுக்குக் கதவுகள், ஜன்னல்கள், நிலைக் கதவுகள் என எதுவுமே பொருத்தப்படவில்லை.


​இதுகுறித்து அப்பகுதி நரிக்குறவர் மக்கள் கண்ணீருடன் கூறுகையில்:

​"கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகாரிகளும், ஒப்பந்தக்காரர்களும் எங்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர். வீடு கட்டுவதற்காக எங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணத்தையும் எங்களை ஏமாற்றி அவர்களே எடுத்துக்கொண்டனர். எங்களை இப்படித் சித்திரவதை செய்து ஏமாற்றுவதற்குப் பதிலாக, எங்களைச் சுட்டுத் தள்ளிவிடுங்கள் என குமுறல்.

​கட்டப்பட்டுள்ள ஒரு சில வீடுகளும் மிகவும் தரம் குறைந்த முறையில் கட்டப்பட்டுள்ளன. செங்கற்களுக்குப் பதிலாக தரமற்ற பேவர் பிளாக் மற்றும் ஹாலோ பிளாக் கற்களைப் பயன்படுத்தியுள்ளனர். இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே முழு காரணம்."



​புதிய வீடுகள் கட்டப்படும் என்ற நம்பிக்கையில், ஏற்கனவே வசித்து வந்த குடிசை வீடுகளையும் இடித்துவிட்டதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது தங்குவதற்கு வீடின்றி, மழைக்காலங்களில் குடும்பத்தோடு தவித்து வருவதாகவும், இதே நிலை நீடித்தால் தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

​எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, முறைகேடுகள் குறித்து விசாரிப்பதோடு, விரைந்து வீடுகளைக் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Post a Comment

0 Comments