நாகை அருகே செருதூரில் படகு இன்ஜின் திருட்டு வழக்கில் தூத்துக்குடி நபர் கைது



நாகை மாவட்டம் கீழையூர் அருகே செருதூர் மீனவர்கள் அளித்த புகாரின் பேரில் படகு இன்ஜின் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த ஜூலை 11ஆம் தேதி செருதூர் மீனவ கிராமத்தில் படகு இன்ஜின் காணாமல் போனதாக மீனவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மகிழி பாலம் அருகே கீழையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது காரை ஓட்டி வந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் அதிகரித்தது. கீழையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் காரை சோதனை செய்ததில், அதில் சுமார் 7 லட்சம் மதிப்பிலான  3 படகு இன்ஜின்கள் மற்றும் மூட்டைகளில் கடல் அட்டை, சுறா இறக்கைகள் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து காரை பறிமுதல் செய்து, அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டம் இனிக்கோத் தெருவை சேர்ந்த மீனவரான பளாரன்ஸ் மகன் பட்டுராஜா (40), என்பது தெரியவந்தது.

மேலும், செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து படகு இன்ஜின்களை திருடியது இவரே என்பதும் போலீசார் விசாரணையில் உறுதியானது.இதனைத் தொடர்ந்து, குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் 3 படகு இன்ஜின்கள், சுமார் 200 கிலோ எடையுடைய கடல் அட்டை 4 மூட்டைகள் மற்றும் சுமார் 170 கிலோ எடையுடைய சுறா துடுப்பு இறக்கைகள் 3 மூட்டைகள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.போலீசாரின் விரைவான நடவடிக்கையால் 10 நாட்களில் குற்றவாளி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, செருதூர் கிராம மீனவர்கள் போலீசாருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

 திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments