இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், வரும் செப். 1 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு கீழையூரில் ஆயத்தக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கீழையூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ஏ. ராமலிங்கம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில உறுப்பினர் டி. செல்வம் விளக்க உரையாற்றினார். தொடர்ந்து, மாவட்ட துணைச் செயலாளர் எம்.கே. நாகராஜன் சிறப்புரையாற்றி, மாவட்டக் குழு முடிவுகளை விளக்கினார்.
கூட்டத்தில், கடந்த 12 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பாஜக அரசு, 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி போன்ற கொள்கைகள் மற்றும் மத அடிப்படையிலான அரசியல் மூலம் ஆட்சி நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் இதனை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில், ஆகஸ்ட் 6 முதல் 15 வரை ஒரு வார காலம் கீழையூர் ஒன்றியம் முழுவதும் 5 குழுக்களாகப் பிரிந்து நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை விளக்க தீர்மானிக்கப்பட்டது.
மேலும், செப்டம்பர் 1 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் பேரணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கீழையூர் ஒன்றியத்திலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் டெல்டா மாவட்டத்தை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனி ரயில் வசதியின் மூலம் நேரடியாக டெல்லி செல்லவும் முடிவு செய்யப்பட்டது.
அதேபோல், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 125 நாட்களாக மத்திய அரசு உயர்த்தி ஜூலை 1 முதல் வேலை தொடங்கிய நிலையில் ஊராட்சியில் சுமார் 20 முதல் 30 பேருக்கு மட்டுமே நாளொன்றுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வேலையில்லாமல் வறுமையில் உள்ள இந்த நேரத்தில் குறைந்தது ஒரு குடும்பத்தில் ஒருவருக்காவது 125 நாள் வேலை முழுமையாக வளங்கிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் வீ.சுப்ரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய துணைச் செயலாளர் ஜி.சங்கர், மாவட்ட குழு உறுப்பினர் எஸ். காந்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் எம்.ஹாஜா அலாவுதீன் மற்றும் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் டி. பாலாஜி, டி. கண்ணையன், டி.சந்திரகாசன்,அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பகத்சிங் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்


0 Comments