பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரியும் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்ததாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி கீழையூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் பகுதியில், விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிர் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதையும், காய்கறி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பா சாகுபடியும் தொடங்க முடியாத சூழல் நிலவி வருவதால் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் எம்.ஹாஜா அலாவுதீன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் ஏ. ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் மாநில குழு உறுப்பினர் டி. செல்வம், தற்போதைய வறட்சி நிலை காரணமாக விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளனர். குறுவை சாகுபடி பொய்த்து போனதால் சம்பா சாகுபடி தொடங்குவதற்கான வாய்ப்புகளும் குறைந்துவிட்டன. எனவே அரசு உடனடியாக டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிர் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.மேலும், நடைபெற உள்ள சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுகுறித்து உடனடி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் எஸ். காந்தி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் வீ. சுப்பிரமணியன், ஒன்றிய துணைச் செயலாளர் ஜி. சங்கர், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் டி. கண்ணையன், டி. பாலாஜி, டி. சந்திரகாசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் ஏ.எஸ். பகத்சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்



0 Comments