நாகை அருகே திருவள்ளுவர் சிலை திறப்பு – முத்தமிழ் மன்றம் முப்பெரும் விழா



திருக்குவளையில் முத்தமிழ் மன்றம் சார்பில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா, விருது வழங்கும் விழா மற்றும் மன்றத்தின் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவிற்கு மன்றத்தின் தலைவர் கவிஞர் குவளை. சோ. கணேசன் தலைமை வகித்தார். செயலாளர் கவிஞர் செந்தூர்குமார் வரவேற்புரையாற்றினார். பொருளாளர் கவிஞர் க. இரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

தஞ்சை தமிழ் மன்றச் செயலாளர் தமிழ்ச்செம்மல் இராம. வேல்முருகன் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கிடையே கட்டுரை, பேச்சு மற்றும் கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



விழாவில் எண்கண் புலவர் சா. மணி, கவிஞர் கோமல் தமிழமுதன், கவிஞர் வடகை நேசன், கவிஞர் நீரை அத்திப்பூ, நாகை கவிஞர் ஆ. மீ. ஜவகர், கவிஞர் ஆரூர் முருகன், சமூக செயற்பாட்டாளர் ஓ. எஸ். இப்ராகிம் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி திருக்குறள் பெருமை குறித்து உரையாற்றினர்.

மேலும் தேவூர் கவிஞர் கே. எஸ். ராஜா, புலவர் தேவநேசன், ஜெ. மு. ராதா, நா. வேலாயுதம், கவிதாயினி சுதா அருணகிரி, எம். மோகன்ராஜ், ஏ. கே. ராஜேந்திரன், மா. அருணகிரிநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.தமிழ்த் தொண்டாற்றிய சான்றோர் பெருமக்களுக்கு பொன்னாடை அணிவித்து “திருவள்ளுவர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.நிகழ்வில் பாடகர் மோகன் இங்கர்சால் மக்களிசைப் பாடல்கள் பாடி பார்வையாளர்களை கவர்ந்தார். மேலும் மாணவர்கள் திருக்குறள் குறித்து பேசியதும், கவிதைகள் பாடியதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.



முன்னதாக திருக்குவளை முத்தமிழ் மன்றம் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நிறுவப்பட்டுள்ள மார்பளவு திருவள்ளுவர் சிலை தமிழ்ச் சான்றோர்களால் திறந்து வைக்கப்பட்டது.நிகழ்ச்சியை மன்ற துணைச் செயலாளர் பா. கவியரசன் தொகுத்து வழங்கினார். முடிவில் துணைத் தலைவர் அருவிதாசன் நன்றி கூறினார்.இவ்விழாவில் தமிழ்ச் சான்றோர், கவிஞர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.

 திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments