ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, கல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் 9-வது வீதியின் பின்புறப் பகுதியில், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்வதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உழன்று வருகின்றனர்.
இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ள நிலையில், அதன் வழியாக மும்முனை (Three-Phase) மின்சாரக் கம்பிகள் செல்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த மின்கம்பிகள், முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது தரைமட்டத்திற்கு மிகத் தாழ்வாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. எந்தளவுக்கு என்றால், அவ்வழியே நடந்து செல்லும் மாடுகள் மீது மின்கம்பி உரசும் அளவிற்கு ஆபத்தான நிலையில் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே வேலை அதிகாரிகள் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசாமல் இருப்பதற்காக, காய்ந்த பனைமர மட்டைகளைக் கொண்டு கம்பிகளைப் பிரித்து தற்காலிகமாக கட்டி வைத்துள்ள அவல நிலை நீடிக்கிறது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடமாடும் இந்த பகுதியில், ஏதேனும் பெரிய அசம்பாவிதமோ அல்லது மின்விபத்தோ ஏற்படுவதற்கு முன்பாக, மின்வாரியத் துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை இழுத்துக் கட்டி சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.




0 Comments