சிவகங்கை: எஸ்.புதூர் அருகே புதிய துணை சுகாதார மையம் திறப்பு..... சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு

 


சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா, எஸ்.புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரிசல்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த சுகாதார மையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து திருப்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி குத்துவிளக்கு ஏற்றி மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

மலைப்பாங்கான பகுதி என்பதால், இப்பகுதி மக்கள் அவசர சிகிச்சைக்காக எஸ்.புதூர், சிங்கம்புணரி மற்றும் புழுதிபட்டி போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய அவலநிலை இருந்தது. இதை கருத்தில் கொண்டு 2024–2025 ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த மையம் கட்டி முடிக்கப்பட்டு தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் அருண்குமார் தெரிவித்ததாவது:

இந்த மையத்தின் மூலம் கரிசல்பட்டி, தேத்தாம்பட்டி, இரணிப்பட்டி, பள்ளப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் 3000-க்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறுவர். மேலும் அவசர காலங்களில் முதல் உதவி சிகிச்சை, தடுப்பூசி சேவைகள் மற்றும் மகப்பேறு தொடர்பான பரிசோதனைகள் இங்கு வழங்கப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நகர் நல அலுவலர் சங்கர்மணி, உதவி செயற்பொறியாளர் சித்திரவேலு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரன் மற்றும் அருள் பிரகாசம், ஒன்றிய பொறியாளர் சையது இப்ராஹிம், புழுதிபட்டி மருத்துவ அலுவலர் தீபதர்ஷினி, உதவி மருத்துவர் வெங்கட ஜோதி, கிராம செவிலியர்கள் மற்றும் தவெக கழக நிர்வாகிகளான வி.என்.ஆர்.நாகராஜன், கருப்பையா, சேக்தாவது ஒளி, சரவணன், கணேசன், வீரன், சசி,வடிவேல், முருகானந்தம், மீனாட்சி மற்றும் உள்ளூர் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments