நாகை: ஏர்வைக்காடு பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி அரைகுறையாக நிறைவு..... விளைநிலங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்.....



நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் மேலவாழக்கரை ஊராட்சி ஏர்வைக்காடு கிராமத்தில் சுமார் 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் விளைநிலங்கள் உள்ளன. குறிப்பாக ஏர்வைக்காடு தெற்கு பகுதியில்  விவசாய நிலங்களுக்கு காவிரிக்கொண்டான் ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால் மூலம் பாசன வசதி கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் வேளாண் பொறியியல் துறை சார்பில் இப்பாசன வாய்க்காலை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 2 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த வாய்க்கால் முழுமையாக தூர்வாரப்படாமல், வாய்க்காலின் மையப்பகுதியில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரம் மட்டுமே பெயரளவுக்கு தூர்வாரப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.



மேலும், வாய்க்காலில் உள்ள சிறுபாலங்கள் மற்றும் கீழ்பாலக்குழாய்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளும் சீரமைக்கப்படாமல் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாசன நீர் முழுமையாக விளைநிலங்களுக்கு சென்று சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டும் முறையான தகவல் கிடைக்கவில்லை என்றும் அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தற்போது மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக காவிரி கடைமடைப் பகுதியான நாகப்பட்டினம் மாவட்டத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிலையில், ஏர்வைக்காடு பகுதியில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி முழுமை பெறாமல் இருப்பது விவசாயிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.



பெயரளவில் மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும் பணியால் வாய்க்காலில் தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், விளைநிலங்களை உழுது சம்பா சாகுபடிக்காக தயார்படுத்தியுள்ள விவசாயிகள் தற்போது பாசன நீருக்காக காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

போர்க்கால அடிப்படையில் முழுமை பெறாமல் உள்ள பாசன வாய்க்காலை முழுமையாக தூர்வாரி, தண்ணீர் தடையின்றி செல்லும் வகையில் சீரமைத்தால் மட்டுமே ஏர்வைக்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்கு பாசன நீர் வந்து சேரும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

உரிய நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் ஏற்கனவே குருவை சாகுபடி பொய்த்துப்போன நிலையில், தற்போது சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி சுரேஷ் கூறியதாவது:

“கடந்த சில ஆண்டுகளாக எங்கள் பகுதியில் உள்ள பாசன கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்ததையடுத்து கடந்த ஜூலை மாதம் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், சுமார் 2 கிலோ மீட்டர் நீளமுள்ள வாய்க்கால் முழுமையாக தூர்வாரப்படாமல், ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பெயரளவுக்கு தூர்வாரப்பட்டுள்ளது. இதனால் தற்போது தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சம்பா சாகுபடி செய்வதே கேள்விக்குறியாகியுள்ளது.

ஏற்கனவே இந்த பகுதியில் மூன்று போக சாகுபடி செய்து வந்த நிலையில், தற்போது ஒரு போக சாகுபடியாவது செய்ய முடியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஏர்வைக்காடு பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் பாசன வாய்க்காலை முழுமையாக தூர்வாரி, பாசன நீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

எனவே, காவிரி நீர் கடைமடைப் பகுதிக்கு வந்து சேரும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஏர்வைக்காடு பாசன வாய்க்காலை முழுமையாக தூர்வாரி, பாலங்கள் மற்றும் குழாய்களையும் சீரமைத்து, சம்பா சாகுபடிக்கு தேவையான பாசன நீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

 திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments