கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள டி.சி.எல் எனப்படும் எலக்ட்ரோ ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் தனியார் தொழிற்சாலையில் 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, 8 மணி நேரத்தை தவிர்த்து கூடுதலாக பெறப்படும் வேலைக்கு இரட்டிப்பு சம்பளம் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 31 நாட்களாக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தாததால், கடந்த 15 நாட்களுக்கு முன்பு போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நிர்வாகம் இன்று வரை பேச்சுவார்த்தைக்கு முன்வராததால், இன்று காலை தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர் ஒருவரும், தொழிலாளி ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் அடுத்தடுத்து மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே பாதுகாப்பு பணியில் இருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் மயக்கம் அடைந்த இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதுவரை அகிம்சை வழியில் நடைபெற்று வந்த போராட்டம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. போராட்டக் களத்திற்கு தொழிலாளர்களின் உறவினர்கள் சிலர் பெட்ரோல் கேன்களுடன் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தொழிலாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



0 Comments