ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் இருந்து ஓரியூர் செல்லும் பிரதான சாலையில், ஆக்களூர் விளக்கு அருகே சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தொடர்ந்து வீணாக வெளியேறி வருகிறது.
இந்தக் குழாய் உடைப்பு காரணமாக வெளியேறும் தண்ணீர் சாலையில் தேங்கி நைந்து போவதுடன், பெரிய அளவில் பள்ளமும் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தச் சாலை கடுமையாகப் பழுதாகி சேதமடைந்துள்ளது.
திருவாடானை - ஓரியூர் சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். தினசரி ஏராளமான இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் பேருந்துகள் இந்த வழியைக் கடந்து செல்கின்றன. தற்போது சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம் மற்றும் நீர் தேக்கம் காரணமாக, குறிப்பாக இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் அதிகளவில் நிலவுகிறது.
மேலும், ஒருபுறம் குடிநீர் வீணாகிக் கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான சாலையும் பாழாகி வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகமும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, உடைந்த குடிநீர் குழாயைச் சீரமைப்பதோடு, சேதமடைந்த சாலையையும் விரைந்து சரிசெய்து விபத்துகளைத் தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் ஆக்களூர் பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments