சபரிமலை அருகே ரூ.4 ஆயிரம் கோடியில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி - MAKKAL NERAM

Breaking

Sunday, March 19, 2023

சபரிமலை அருகே ரூ.4 ஆயிரம் கோடியில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி

 

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் போக்குவரத்து வசதிைய மேம்படும் விதமாக சபரிமலை அருகே புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கேரளாவைச் சேர்ந்த ஆன்டோ ஆன்றனி எம்.பி. கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, '2020 -ம் ஆண்டில் கேரள மாநில தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் சபரிமலை அருகே உள்ள எருமேலி பகுதியில் விமான நிலையம் அமைக்க விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. இதற்கான சாத்தியக் கூறுகள், ஆய்வு நடவடிக்கைகள் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலையம் அமைக்க மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது. அடுத்ததாக சுற்றுச்சூழல் அனுமதிக்காக காத்திருக்கிறோம். புதிய விமான நிலையம் அமைவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கத்தை மாநில தொழில் வளர்ச்சி கழகம் ஆய்வு செய்து வருகிறது. இந்த புதிய விமான நிலைய கட்டுமானத்தால் 150 கி.மீ. சுற்றளவில் உள்ள திருவனந்தபுரம், கொச்சி மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் ஏற்படும் தாக்கங்களை ஆய்வு செய்து அதன்படி இறுதி முடிவு எடுக்கப்படும்" என்றார். முன்னதாக இரண்டு நாள்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பேசிய விமானப் போக்குவரத்துறை இணை மந்திரி வி.கே. சிங், 'சபரிமலையில் விமான நிலையம் அமைக்க 2,300 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கான செலவு சுமார் ரூ.4 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment