மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு சிறை - MAKKAL NERAM

Breaking

Tuesday, July 18, 2023

மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு சிறை

 


கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் சரத். இவருடைய மனைவி அஜிதா (வயது 35). இவர் திருச்சி சத்திரம் பஸ்நிலையம் பகுதியில் கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக வந்த புகாரின்பேரில் திருச்சி மாநகர விபசார தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன் சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில், அந்த வழக்கை தனக்கு சாதகமாக முடித்து தரும்படி அஜிதா விபசார தடுப்பு பிரிவு போலீசாரை அணுகி உள்ளார்.


அப்போது, வழக்கை சாதகமாக முடித்து தர ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரும்படி விபசார தடுப்பு பிரிவு பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமா (56) அஜிதாவிடம் கேட்டுள்ளார். வழக்கு காரணமாக தற்போது மசாஜ் சென்டரை நடத்த முடியாத நிலையில் இருப்பதால் தன்னால் ரூ.10 ஆயிரம் தரமுடியாது என்று கூறியுள்ளார்.


ஆனாலும், அவரை விடாத சப்-இன்ஸ்பெக்டர் ரமா, இப்போது முன்பணமாக ரூ.3 ஆயிரம் கொடுத்தால், வழக்கை உனக்கு சாதகமாக முடித்து தருகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அஜிதா, இதுபற்றி திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.


இதையடுத்து அவர்கள் கொடுத்த யோசனையின்படி அஜிதா, நேற்று காலை 11 மணியளவில் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள விபசார தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்துக்கு சென்று, ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரத்தை சப்-இன்ஸ்பெக்டர் ரமாவிடம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கி எண்ணியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ரமாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர், விபசார தடுப்பு பிரிவு அலுவலகத்திலும், சப்-இன்ஸ்பெக்டர் ரமாவின் வீடு மற்றும் அவருடைய இருசக்கர வாகனத்திலும் சோதனை மேற்கொண்டனர்.


அப்போது, ரமாவின் ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் ஒரு பிளாஸ்டிக் பையில் 500 ரூபாய் நோட்டுகளாக கட்டு, கட்டாக இருந்த ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் ரமாவிடம் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறினார். இதைத்தொடர்ந்து ரமாவை திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திருச்சி பெண்கள் தனி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment