• Breaking News

    புழல் சிறைக்கு செல்கிறார் செந்தில்பாலாஜி

     


    சென்னை காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதய அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, அங்கிருந்து புழல் சிறைக்கு மாற்றப்படுகிறார்.


    கடந்த ஜூன் 13-ஆம் தேதி நள்ளிரவில் அமலாத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்படி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் அங்கு அவருக்கு இதய அறுவை (பைபாஸ் சர்ஜரி) சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.


    காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 21-ஆம் தேதி அதிகாலை இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு இருதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்களில் 4 அடைப்புகள் இருந்ததால் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. இந்த நிலையில், காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி தற்போது டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார்.


    மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஆயுதப்படை போலீசாரின் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படுகிறார். ஜூலை 26-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 108 ஆம்புலன்ஸ் மூலம் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படுகிறார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 2 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது புழல் சிறைக்கு மாற்றப்படுகிறார்.


    புழல் சிறைக்கு மாற்றப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை வழங்குவர் எனவும் கூறப்படுகிறது. மேலும், செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, அவரை அமலாக்கத்துறை காவலில் அனுப்புவது குறித்து முடிவெடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


    ஆட்கொணர்வு மனு மீது 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து, மூன்றாவது நீதிபதியும் விசாரணை நடத்தி சமீபத்தில் தீர்ப்பு அளித்தார். அப்போது, அமலாக்கத்துறை கைது சட்டபூர்வமானது, செந்தில் பாலாஜியை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது, அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் எனவும் எப்போது காவலில் எடுப்பது குறித்து 2 நீதிபதிகள் அமர்வு முடிவு செய்து அறிவிக்கும் எனவும் 3வது நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.

    No comments