திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம் - MAKKAL NERAM

Breaking

Sunday, September 17, 2023

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்

 


அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கடற்கரை அருகில் அமைந்திருப்பதால், திருவிழா காலங்களில் தவிர்த்து மற்ற சாதாரண நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.இந்நிலையில், ஞாயிறு விடுமுறை தினம் மற்றும் சுபமுகூர்த்த நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்றன. மேலும் சுப முகூர்த்த நாள் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான திருமண ஜோடிகள், பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். மேலும் கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடந்தன.இதனால் கோவில் வளாகம் மற்றும் கடற்கரை, திருவிழா காலம் போல் காட்சியளித்தது. அதிகாலை முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி பொது தரிசனத்தில் சுமார் 5 மணி நேரமும், ரூ.100 கட்டண தரிசனத்தில் சுமார் 3 மணி நேரமும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அதிகளவில் வந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment