கோவை நகைக்கடை கொள்ளை..... திருடனின் மனைவி கைது..... - MAKKAL NERAM

Breaking

Thursday, November 30, 2023

கோவை நகைக்கடை கொள்ளை..... திருடனின் மனைவி கைது.....

 


கோவையில் தனியார் நகைக்கடையில் 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையன் இன்னும் கைது செய்யப்படவில்லை என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நவம்பர் 28-ம் தேதி அதிகாலை, வைரம் உள்பட 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து, சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த 2 நாட்களாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த நிலையில், சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், ”நகைக்கடை கொள்ளையனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தர்மபுரி மாவட்டம் ஆரூரைச் சேர்ந்த விஜய் என்பதும், இந்த கொள்ளை சம்பவத்துக்கு அவரது மனைவி நர்மதா உடந்தையாக செயல்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. நகைகளை திருட திட்டமிட்டதிலிருந்து பதுக்கி வைப்பது மற்றும் விஜய்யை தப்பிக்க வைப்பது, அவரது மனைவிக்கு பங்கு உள்ளது. 4 கிலோ 200 கிராம் தங்கம் மற்றும் பிளாட்டினம் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் பதிவான நிலையில் விஜய்யின் மனைவி நர்மதாவை கைது செய்து அவரிடம் இருந்து 3 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது.



அரூர் அடுத்த கம்பைநல்லூர் மற்றும் கோவை ஆர்.எஸ் புரம் காவல் காவல் நிலையங்களில் விஜய் மீது ஏற்கெனவே 3 திருட்டு வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் மேலும் யாரும் உடன்பட்டுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது போன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்க கோவை மாநகர பகுதிகளில் உள்ள நகைக் கடைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வைத்துள்ள கடைகளில் உயர் தொழில்நுட்பம் கொண்ட கேமராக்களை பொருத்த அறிவுறுத்தியுள்ளோம். கோவையில் குற்ற சம்பவங்களை தடுக்க இரவு நேர ரோந்து பணியை அதிகரித்து, சிசிடிவி செயலி வாயிலாக கண்காணித்து வருகிறோம். கடையில் பணியாற்றும் ஊழியர்கள் யாராவது விஜய்க்கு உதவி செய்துள்ளார்களா என்பது அவரது கைதுக்கு பின்பே தெரியவரும்” என தெரிவித்தார்‌.

இதனிடையே தப்பிச்சென்ற கொள்ளையன் விஜயை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலீஸார் வருவது தெரிந்ததும், விஜய் தனது வீட்டின் ஓட்டைபிரித்து தப்பிச்சென்றதாக கூறப்படும் நிலையில், தமிழ்நாட்டை விட்டு தப்பியோட முடியாதபடி போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment