நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளித்து வருவதாகவும் தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொண்டர்களை நிலைகுலையச் செய்துள்ளது.
முன்னதாக நேற்று முன் தினம் இரவு, வழக்கமான பரிசோதனைகளுக்காக நடிகரும், தேமுதிமுக நிறுவன தலைவருமான விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், வழக்கமான பரிசோதனைகளுக்குப் பின்னர் இரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் நடிகர் விஜயகாந்த், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இருமல், சளி தொந்தரவுகள், தொண்டை வலி ஏற்பட்டதால் கடந்த மாதம் 18-ம் தேதி சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விஜயகாந்திற்கு, அதன் பின்னர் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் இருந்ததால்அந்த நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
பின்னர், விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், அவரை நுரையீரல் நிபுணர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருவதாகவும், அவருக்கு முழுவதுமாக ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் தகவல் வெளியானது. அதன் பின்னர், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன் பின்னர் தேமுதிக செயற்குழு, பொதுகுழு கூட்டங்களிலும் கலந்து கொண்டார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு மீண்டும் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைகளுக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே சுவாசப் பிரச்சினை மற்றும், தொண்டையில் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நடிகர் விஜயகாந்துக்கு, தற்போது கொரோனா தொற்று பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேமுதிக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment