• Breaking News

    தேர்தல் ஆணையர் என் மாமாவா, மச்சானா - அண்ணாமலை ஆவேசம்

     

    தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகல் குறித்து கருத்து கேட்ட போது, ”அவர் எனது மாமாவா மச்சானா, அவர் பதவி விலகியது குறித்து நான் எப்படி கருத்து தெரிவிக்க முடியும்?” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இன்று கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மூத்த நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் அரசியல் மாற்றங்களை மாற்ற வேண்டும் என கட்சியை ஆரம்பித்தார். இப்போது மறுபடியும் திமுக பக்கத்தில் இணைந்துள்ளார். அரசியல் என்பது கடினமான வேலை. கொள்கை அரசியல் என்பது ஒரு கடினமான வேலை. எங்கு செல்ல வேண்டும் என்பது கமல்ஹாசனின் முடிவு. மேலும் இது திமுகவின் ஆதிக்கம் அரசியலில் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதற்கு சான்று” என்றார்.மேலும் பேசுகையில், “மாற்றத்தை யாரெல்லாம் விரும்புகிறவர்களோ, அவர்களுக்கான ஒரேயொரு கட்சி பாஜக தான். தமிழகத்தில் மாற்றங்களை கொடுக்க வேண்டும் என பாஜக களம் இறங்கியுள்ளது.

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் என்.சி.பி., அதிகாரிகள் இன்னும் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ அதை எல்லாம் கண்டுபிடித்து தமிழக மக்கள் முன்னால் நிறுத்த வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு. அதை என்.சி.பி., செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் இன்றைக்கு நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். அவர்கள் சமூக ஆர்வலர்களாக இருக்கிறார்களா? எதற்கு எடுத்தாலும் நடிகர்கள் தான் பேச வேண்டும் என்பதிலிருந்து வெளியே வரவேண்டும்” என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், “டெக் பார்க் அமைப்பதற்கு எத்தனையோ இடங்கள் உள்ளது. திமுக ஆட்சி புதிதாக டெக் பார்க் போடுகிறார்கள் என்றால், பக்கத்தில் அவர்கள் நிலம் வாங்கி இருப்பார்கள். திமுக ஆட்சியில் வளர்ச்சி என்பது கேள்விக்குறி” என்றார்.

    தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளது குறித்த கேள்விக்கு, ”அவர் எனக்கு மாமனா மச்சானா? அவர் ஏன் ராஜினாமா செய்தார் என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். தெரியாத யூகங்களுக்கு ஏன் பதில் சொல்ல வேண்டும்?” என்றார்.

    No comments