தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி பகுதி தமிழக கேரளா எல்லை ஒட்டியுள்ள பகுதியாகும். நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன.இதில் 3-வது வார்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் 25 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வரும் பொது மக்களுக்கு அடிப்படை தேவைகளான சாக்கடை வசதி, கழிப்பிட வசதி, சாலை வசதி, மின்சார வசதி லமற்றும் குடிநீர் தேவைகளை சரி செய்து தரக்கோரி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளனர். இருப்பினும் நகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் கூறும் போது தங்கள் வசிக்கும் பகுதியில் சாக்கடை கட்டி பல ஆண்டுகள் ஆகிய நிலையிலும் தற்பொழுது மண் மேவி சாக்கடை கழிவு நீர் தேங்கியுள்ளது.
இந்த சாக்கடை கழிவு நீர் தேங்கியுள்ளதால் சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு டெங்கு மலேரியா போன்ற நோய்கள் பரவுவதாகவும், அதேபோன்று முல்லைப் பெரியார் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கூடலூர் நகராட்சியில் எங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைப்பதில்லை எனவும் குடிநீர் தேவைக்காக ஒரு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டி உள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதேபோன்று இப்பகுதியில் கழிப்பறை வசதி இல்லாததால் அனைவரும் காட்டுப் பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது. இதில் இரவு நேரங்களில் விஷ பூச்சிகள் பாதிப்புகள் உள்ளதாகவும், பாதுகாப்பற்ற சூழலில் இயற்கை உபாதைகளைக் கழிக்க செல்வதாகவும் கூறினர்.
மேலும் 100 குடும்பங்கள் வாழும் அந்த பகுதியில் ஒரே ஒரு திருவிளக்கு மட்டுமே உள்ளதாகவும், இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொழுது தடுக்க விருந்து காயங்கள் ஏற்படுவதாகவும் கூறினார்கள்.
எனவே 3 -வது வார்டில் வசிக்கும் எங்களுக்கு நகராட்சி நிர்வாகம் உடனடியாக தெருவிளக்கு, கழிவுநீர், சாக்கடை வசதி, குடிநீர் வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் எனவும், அவ்வாறு செய்து தராத பட்சத்தில் நகராட்சி அலுவலகத்தில் பல கட்ட போராட்டங்களை நடத்துவோம் எனக் கூறினர்.
இன்று வளர்ந்து வரும் நகராட்சிகளில் முக்கிய நகராட்சியாக உள்ள கூடலூர் நகராட்சியில் ஒரு வார்டு அடிப்படை வசதி இன்றி இருப்பது பரிதாபத்துக்குரிய செயலாகும்.
No comments:
Post a Comment