செங்கல்பட்டு: இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி தாசில்தாருக்கு சீர்வரிசையுடன் மாலை போட்டு மனு கொடுத்த பழங்குடியின மக்கள்
கீரப்பாக்கம் ஊராட்சியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி தாசில்தாருக்கு சீர்வரிசையுடன் மாலை போட்டு பழங்குடியின மக்கள் மனு கொடுத்து வலியுறுத்தினர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரப்பாக்கம், நல்லம்பாக்கம் மற்றும் வேங்கடமங்கலம் ஆகிய ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் ஊராட்சியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் வண்டலூர் தாசில்தார் புஷ்பலதா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் வேங்கடமங்கலம் கல்யாணிரவி, கீரப்பாக்கம் செல்வசுந்தரி ராஜேந்திரன், நல்லம்பாக்கம் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், துணை தலைவர் ஏவிஎம் இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமினை குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் கீரப்பாக்கம் ஊராட்சி மன்றம் 4-வது வார்டு உறுப்பினர் சசிகலாதனசேகரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்கள் மற்றும் பொதுமக்கள் சீர் வரிசையுடன் திரண்டு வந்து தாசில்தார் புஷ்பலதாவுக்கு மாலை போட்டு கீரப்பாக்கம் ஊராட்சியில் ஆட்சேபனை அற்ற அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வரும் 300-க்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தியும், இலவச தொகுப்பு வீடுகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், விளையாட்டு திடல், சமுதாயக்கூடம், ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும், சிறுவர் பூங்கா, உடற்பயிற்சியகம், சாலை, கால்வாய், தெரு விளக்கு, குடிநீர், பஸ் வசதி உள்ளிட்ட 21 கோரிக்கை மனுக்களை கொடுத்து நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினர். இதில் மண்டல துணை வட்டாட்சியர் கோபி உட்பட ஊராட்சி மன்ற துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், 100-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
No comments