கவர்னர் ரவியை உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
கவர்னர் ரவியை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழகத்தின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். ஹிந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் கவர்னர்!
திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் கவர்னர், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழகத்தையும் - தமிழக மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் கவர்னரை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்!. இவ்வாறு அந்த பதிவில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள டிடி தமிழ் அலுவலகத்தில் நடந்த ஹிந்தி தின விழாவில் கவர்னர் ரவி பங்கேற்றார். இவ்விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது, 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்' என்ற வரி பாடப்படவில்லை. இதனையடுத்து, கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஸ்டாலின் மேற்கண்ட பதிவை வெளியிட்டு உள்ளார்.
No comments