நமது கலாசாரத்தை அழிக்க ஒரு சக்தி முற்படுகிறது..... ஆளுநர் ஆர்.என்.ரவி ஆவேசம் - MAKKAL NERAM

Breaking

Tuesday, January 28, 2025

நமது கலாசாரத்தை அழிக்க ஒரு சக்தி முற்படுகிறது..... ஆளுநர் ஆர்.என்.ரவி ஆவேசம்

 


கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், சுவாமி சகஜானந்தா ஆன்மிகம் மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் சுவாமி சகஜானந்தர் 135வது ஆண்டு பிறந்தநாள் விழா நேற்று நடந்தது.

இவ்விழாவை, தமிழக கவர்னர் ரவி துவக்கி வைத்து பேசியதாவது: 

இந்திய கலாசாரம், ஹிந்து சமுதாயத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதை அழித்தால் மட்டுமே, நாம் இந்தியாவில் நுழைய முடியும் என கார்ல் மார்க்ஸ், பிரிட்டிஷ் அரசிடம் தெரிவித்தார். மற்றொன்று, 'உங்கள் கடவுள் தீய சக்தி, எங்களது கடவுள் உயர்ந்தது' என கூறி மதம் மாற்றம் செய்ய கிறிஸ்துவ மிஷனரிகள் முனைந்தார்கள். தற்போது அந்த வரலாற்றை திருத்தி, பொய் சொல்லி வருகின்றனர்.இப்படிப்பட்ட சூழலில் தான் சுவாமி சகஜானந்தா, இரண்டு தீய சக்திகளை ஒதுக்கி வைத்து, கல்வி மூலம் தான் நம் சமுதாயத்தை வளர்க்க முடியும் என நினைத்தார். அதற்காக நந்தனார் கல்விக் கழகத்தை துவக்கி வைத்தார். இன்றும், பட்டியல் சமூக ஊராட்சி தலைவர்கள், அவர்களுக்குரிய நாற்காலியில் அமரமுடியாத நிலை உள்ளது. சில இடங்களில் மக்கள் காலணி அணிந்து நடக்க முடியவில்லை.

நாகை கீழ்வெண்மணி யில் 48 தலித் சமுதாயத்தினர் மாவோயிஸ்ட் துாண்டுதலின்பேரில் தீயிட்டு எரிக்கப்பட்டனர். இன்னும் அப்பகுதி மக்கள் கஷ்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். அரசியல் காரணமாக அவர்கள் இன்றும் ஏழ்மையில் வாழ்ந்து வருகின்றனர். இதுபோன்ற காலக்கட்டத்தில்தான் சுவாமி சகஜானந்தா வருகை தந்து நந்தனார் பெயரில், தலித் மக்களுக்கு கல்வி நிறுவனங்களை சிதம்பரத்தில் தொடங்கினார். அதனால், மாற்றம் ஏற்பட்டது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்த 2 சக்திகளுடன், தற்போது, சுதந்திரத்திற்கு பிறகு 3வது சக்தியாக சமூகநீதி தருகிறோம் என ஒரு சக்தி உருவெடுத்து, நமது கலாசாரம், நாகரிகம், தர்மத்தை அழிக்க முற்பட்டுள்ளது. எனவே, நாம் சுவாமி சகஜானந்தர் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும். தலித் சமுதாயத்தில் 200க்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் உள்ளன. இந்த உட்பிரிவுகளுக்கு, தற்போது வந்துள்ள 3வது சக்தி சண்டையை ஏற்படுத்தி அரசியல் செய்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment