அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கு..... இன்று தீர்ப்பு - MAKKAL NERAM

Breaking

Wednesday, May 28, 2025

அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கு..... இன்று தீர்ப்பு

 


சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி இரவு, அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அங்கிருந்து விரட்டி விட்டு மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அடையாறு பகுதியில் சாலையோர உணவகம் நடத்தி வந்த கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பவரை கைது செய்தனர்.

ஞானசேகரன் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர், பாலியல் பலாத்கார வழக்கை விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தனர். அதன்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.சென்னையில் உள்ள மகளிர் கோர்ட்டில் மார்ச் மாதம் முதல் விசாரணை தொடங்கியது. அப்போது, ஞானசேகரனுக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து ஞானசேகரன் சார்பில் ஆஜராக வக்கீல்கள் கோதண்டராமன், ஜெயபிரகாஷ் ஆகியோரை சட்டப்பணி ஆணைக்குழு நியமித்தது.

கடந்த ஏப்ரல் 23-ந்தேதி சாட்சி விசாரணை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடந்தது. பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

போலீஸ் தரப்பில் வக்கீல் எம்.பி.மேரி ஜெயந்தி ஆஜராகி வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (புதன்கிழமை) வழங்குவதாக நீதிபதி ராஜலட்சுமி கடந்த வாரம் உத்தரவிட்டார்.

அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி பிறப்பிக்க உள்ளார்.

No comments:

Post a Comment