நாளையுடன் முடிவடைகிறது கத்தரி வெயில்

 


தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக மார்ச் மாதம் முதலே கோடை காலம் தொடங்கிவிடுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் மார்ச் மாதம் முதல் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. பல இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியது.

.இதற்கு மத்தியில், இம்மாதம் (மே) 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்தரி வெயில் தொடங்கியது. ஏற்கனவே, வெயில் பாடாய்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அக்னி நட்சத்திர காலத்தில் அது மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்பட்டது.

ஆனால், இயற்கை எண்ண நினைத்ததோ தெரியவில்லை, கிழக்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின்போக்கு மாறியது. இதனால், தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கியது. ஒரு புறம் வெயில், மறுபுறம் மழை என்று வித்தியாசமான வானிலை சூழல் நிலவியது. இதனால், அக்னி நட்சத்திர காலத்தில் அனுபவிக்க வேண்டிய வெப்பத்தின் தன்மை குறைந்து குளிர் காற்று வீசத் தொடங்கியது. மேலும், ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழையும் ஒரு வாரத்திற்கு முன்னதாக தொடங்கியதால், வெயிலின் அளவு வெகுவாக குறைந்தது. இந்த நிலையில், அக்னி நட்சத்திரம் நாளையுடன் (28-ந் தேதி) முடிவடைகிறது. மொத்தத்தில் அக்னி நட்சத்திரம் காலமான 25 நாட்களும் வெயில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே கூறலாம். தற்போது, தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், வெயில் படிப்படியாக குறைய வாய்ப்பு இருக்கிறது.

Post a Comment

0 Comments