ஏர் இந்தியா விமான விபத்து..... அடையாளம் காணப்பட்ட உடல்கள் குடும்பத்தாரிடம் இன்று ஒப்படைப்பு - MAKKAL NERAM

Breaking

Sunday, June 15, 2025

ஏர் இந்தியா விமான விபத்து..... அடையாளம் காணப்பட்ட உடல்கள் குடும்பத்தாரிடம் இன்று ஒப்படைப்பு

 


குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்து உலக விமானப் போக்குவரத்து துறையை உலுக்கி இருக்கிறது. அங்குள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள், 2 விமானிகள் மற்றும் 10 பணியாளர்கள் என 242 பேருடன் கடந்த 12-ந்தேதி லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது.

டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியாவின் போயிங் 787 வரிசை விமானங்களில் ஒன்றான இந்த விமானம், சில நிமிடங்களில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் விழுந்து வெடித்து சிதறியது.

விமானத்தில் இருந்தவர்களும், தரையில் இருந்தவர்களும் என்ன நடக்கிறது? என அறிந்து கொள்வதற்கு முன்னரே அனைத்தும் முடிந்து விட்டது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உடல் கருகி பலியாகினர். இதில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் ஒருவர். இறந்தவர்களில் பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி சோகத்தை கூட்டி விட்டன.

மேலும் மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் இருந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் அந்த மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்தவர்கள் என பலரும் இந்த துயர சம்பவத்தில் சிக்கியதால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

அதேநேரம் விமானத்தில் பயணித்த இங்கிலாந்து குடியுரிமை பெற்ற இந்தியரான விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினார். இதைப்போல மருத்துவக்கல்லூரி விடுதியில் இருந்த டாக்டர்கள், மாணவர்கள் மற்றும் ஜே.பி. மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்கள் என பலர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, விமானப்போக்குவரத்து மந்திரி ராம்மோகன் நாயுடு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டனர்.பிரதமர் மோடியும் நேற்று முன்தினம் ஆமதாபாத் சென்று விபத்து இடத்தை பார்வையிட்டதுடன், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் விபத்தில் பலியான முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானி குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இதற்கிடையே விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் மேலும் சிலர் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த கொடூர விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 274-ஐ எட்டியது.விமானத்தில் பயணித்த 241 பேர் மற்றும் 5 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் உள்பட மேலும் 33 பேரும் இந்த பெரும் துயரில் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 270 உடல்கள் ஆமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு இதுவரை கொண்டு வரப்பட்டு உள்ளதாக பி.ஜே. மருத்துவக்கல்லூரி இளநிலை டாக்டர்கள் சங்க தலைவர் டாக்டர் தவால் கமெட்டி தெரிவித்தார்.

இதன் மூலம் கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த மிகவும் மோசமான விமான விபத்தாக இந்த நிகழ்வு பதிவாகி இருக்கிறது.

பலியானவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகியதால் டி.என்.ஏ. சோதனை மூலம் உடல்கள் ஒப்படைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த பரிசோதனை முடித்து நேற்று முன்தினம் 6 உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. முன்னதாக டி.என்.ஏ. சோதனை செய்யாமலேயே நேரடியாக உறவினர்கள் அடையாளம் காட்டிய 8 உடல்கள் ஒப்படைக்கப்பட்டு இருந்தன.

டி.என்.ஏ. சோதனை நடவடிக்கையை மாநில உள்துறை மந்திரி ஹர்ஷ் சங்கவி மேற்பார்வையிட்டு தீவிரப்படுத்தி வருகிறார். இது தொடர்பாக தடயவியல் துறை அதிகாரிகளுடன் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

மரபணு பரிசோதனை சுமார் 72 மணி நேரம் வரை எடுக்கும் எனக்கூறிய போலீஸ் அதிகாரி ஒருவர், மரபணு ஒத்துப்போவது தெரிந்தால் உடனே உடல்கள் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினார். தங்கள் அன்புக்குரியவர்களை பறிகொடுத்தது மட்டுமின்றி, அந்த உடல்களை பெறுவதற்கும் நாள்கணக்கில் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டதை எண்ணி உறவினர்கள் கதறி வருகின்றனர். இதனால் உடல்கள் வைக்கப்பட்டுள்ள சிவில் மருத்துவமனை வளாகம் முழுவதும் சோகமயமாக காட்சி அளிக்கிறது.

இந்நிலையில் ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணி இன்று தொடங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.ஏ. பரிசோதனை, உடல்களை எடுத்துச் செல்லுதல் ஆகிய பணிகளில் மருத்துவர்கள், உதவியாளர்கள், ஓட்டுநர்கள் என சுமார் 600 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டவர்களின் சடலங்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment