• Breaking News

    பழவேற்காட்டில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா முன்னிட்டு படகு போட்டி..... வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள் எம்.பி, எம்.எல்.ஏ.....


    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய ஒற்றுமை படகு போட்டி நேற்று நடைபெற்றது. பழவேற்காடு சுற்றுப்பகுதிகளில் உள்ள மீனவ கிராம மக்கள் இந்த படகு போட்டியில் கலந்து கொண்டனர். பழவேற்காடு கலங்கரை விளக்கத்தின் அருகே கடற்கரையில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை கொடி நடப்பட்டு அதனை சுற்றி மீண்டும் கரை திரும்புவது வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

     திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில், பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் ஆகியோர் கொடியசைத்து இந்த படகு போட்டியை தொடங்கி வைத்தனர். கொடியசைத்து போட்டியை தொடங்கியதும் படகுகள் அனைத்தும் கரும்புகையை கக்கியபடி, படகு இன்ஜின் சத்தத்துடன், கடல் அலைகளை கிழித்து கொண்டு இலக்கு நோக்கி சீறிப்பாய்ந்தன. குறிப்பிட்ட இலக்கை அடைந்து மீண்டும் கரை திருப்பிய படகுகளுக்கு மக்கள் கை தட்டி ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் முதல் பரிசு பெற்ற காட்டுப்பள்ளி குப்பம் படகு உரிமையாளருக்கு ரூ 1 லட்சம் ரொக்கப் பரிசும், கோப்பையும் பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் வழங்கினார். இரண்டாம் பரிசு பெற்ற படகு உரிமையாளருக்கு ரூ.75000 ரொக்கப் பரிசும், கோப்பையும், மூன்றாம் பரிசு பெற்ற படகு உரிமையாளருக்கு ரூ.50000 ரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது. இனி வரும் காலங்களில் ஆண்டு தோறும் பழவேற்காட்டில் படகு போட்டி நடத்தப்படும் என எம்எல்ஏ துரை.சந்திரசேகர் தெரிவித்தார். 


    காங்கிரஸ் நிர்வாகிகள் பொன்னேரி சதாசிவ லிங்கம்,காட்டுப்பள்ளி D.முனுசாமி வட்டார் தலைவர் ஜெயசீலன் ,பொருளாளர் மணவாளன் , மீனவர் அணி மாவட்ட தலைவர் ஜெயராமன் ,புருஷோத்தமன், ராஜேந்திரன்,மனோபா,ரங்கன் ,மோகன் ,ராஜா,நந்தா உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நடைபெற்ற படகு போட்டிக்கு செங்குன்றம் காவல் உதவி ஆணையர் சங்கர் தலைமையில் திருப்பாலைவனம் ஆய்வாளர் காளிராஜ் உள்ளிட்ட 25.க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

     

    No comments