• Breaking News

    கந்தர்வக்கோட்டை: யூடியூப் சேனலுக்காக 120 நாய்களை வளர்க்கும் பெண்..... உயிர் பயத்தை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.....

     


    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே முல்லைநகர் பகுதியில் வசித்து வரும் கலைச்செல்வி என்ற பெண், “அம்மாச்சல்லம்” என்ற யூடியூப் சேனலுக்காக 120க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வருகிறார். ஆரம்பத்தில் 2 நாய்குட்டிகளை மட்டுமே வளர்த்திருந்த அவர், தற்போது தெருநாய்கள் பலரை ஒட்டி வளர்த்து, அவை தொடர்பான வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

    இந்நிலையில், அந்த நாய்கள் அப்பகுதி மக்களிடம் பயத்தை ஏற்படுத்தி வருகின்றன என புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக பள்ளி முடிந்து வீடு திரும்பும் சிறுவர்கள் மீது நாய்கள் பாயும் நிலை ஏற்படுவதால், குழந்தைகளை வீடுகளுக்குள்ளே வைத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    “வயதானவர்கள், குழந்தைகள் நாய்களுக்கு பயந்து வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாய்கள் சொறி பிடித்து திரிகின்றன, சாலைகளில் இறந்து கிடக்கின்றன” என மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

    இதுபற்றிக் கேட்கப் போன மக்களிடம், கலைச்செல்வி கோபத்துடன், அவமதிக்கும் வார்த்தைகளில் பேசியதாகவும் கூறப்படுகிறது. “நாய்கள் அன்பு தான் தேடும் உயிரினங்கள். சாப்பாடு இல்லாம, பாசம் இல்லாம திரியும் பிள்ளைகளுக்கு நாங்கள் உதவி செய்கிறோம்.

    என் நாய்கள் யாரையும் விரட்டவே மாட்டேன், அவங்க பாசம் தேடுறது” என கலைச்செல்வி தெரிவித்துள்ளார். ஆனால் மக்கள் கூறுவதைப் பொறுத்தவரை, நாய்கள் கட்டுப்பாடின்றி சாலைகளில் ஓடி, கடிக்க பாயும் நிலை உருவாகி இருப்பதாகவும், குழந்தைகளுக்கு ‘ராபிஸ்’ நோய் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுவதாகவும் கூறுகின்றனர்.

    இதனிடையே, மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குடும்பங்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால் யூடியூப் பேஷன் பெயரில் பொது இடங்களில் உயிர் அபாயத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள் அனுமதிக்கப்படக்கூடாது என்றும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    No comments