2026 சட்டமன்ற தேர்தல் இந்தியாவையும், தமிழ்நாட்டையும் பாதுகாக்க கூடிய தேர்தல்..... பொன்னேரியில் திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா பேச்சு......
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம். எஸ் .கே. ரமேஷ்ராஜ் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் மண்டல பொறுப்பாளரான திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா, அமைச்சர் நாசர் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
அப்போது பேசிய ஆ.ராசா 2026இல் வரவுள்ள சட்டமன்ற தேர்தல் என்பது இந்தியாவின் அரசியல் சட்டத்தை பாதுகாக்க கூடிய தேர்தல் எனவும், இந்தியாவையும், தமிழ்நாட்டையும், அரசியல் சட்டத்தையும் பாதுகாக்க கூடிய தேர்தல் என்றார். அரசியல் என வந்து விட்டால் தமிழ்நாட்டில் அரசியலையும், ஆன்மீகத்தையும் கலக்க மாட்டோம் என்றும், தாய் மொழி தொடர்பாக மகாராஷ்டிராவில் தற்போது விழிப்புணர்வு வந்துள்ளது எனவும், நம் நாட்டில் உணவு, உடை, கலாச்சாரம் அனைத்தும் வேறு வேறு, ஆனால் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என பாஜக முயற்சி செய்து வருகிறது எனவும் அரசியல் சட்டத்தை எடுக்க தான் பாஜக முயற்சி செய்து வருகிறது என தெரிவித்தார். நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 5500 மருத்துவ சீட் ஒன்றிய அரசு கபளீகரம் செய்தது, அதில் 15% இட ஒதுக்கீட்டு மறுக்கப்பட்டது என்றும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு 15% இட ஒதுக்கீட்டை பெற்று தந்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்றார். எந்த கட்சியும் இதுவரை தேர்தல் பணியும், கூட்டணி தொடங்கவில்லை, நாம் ஏன் விரைவாக தொடங்க வேண்டும் என கேட்ட போது, அமலாக்கத்துறை போன்ற அனைத்து துறைகளும் நமக்கு எதிரி என முதலமைச்சர் தெரிவித்ததாக கூறினார்.
யூனிட் ஒன்றிற்கு 1பைசா குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்த விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் எம்ஜிஆர் எனவும், விவசாயிகளின் பெருந் துயரை கணக்கில் கொண்டு விவசாயிகள் யூனிட் ஒன்றிற்கு 1பைசா கூட கொடுக்க வேண்டாம் என்று இலவச மின்சாரம் கொடுத்தவர் தலைவர் கலைஞர் எனவும் சாதனைகளை கொண்டு வாக்களித்தால் கலைஞர் சாகும் வரை முதலமைச்சராக இருந்திருக்க வேண்டும் எனவும், கட்சியிலும், ஆட்சியிலும் படிப்படியான பரிணாம வளர்ச்சி அடைந்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்றார். முந்தைய காலத்தில் திமுகவினர் ஒரு டீ கொடுத்தாலே தேர்தல் பணி செய்கிறார்கள் என பிற கட்சியினர் கூறுவார்கள் எனவும், தேர்தல் பணிக்காக கொடுக்கப்பட்ட சிங்கிள் டீ தற்போது பிரியாணியாக மாறி உள்ளது என நகைச்சுவையாக கூறினார்.
இதனிடையே பாக முகவர்களிடம் ஆ.ராசா கேள்வி எழுப்பிய போது சிலர் சரிவர பதிலளிக்காததால் நீங்கள் முறையாக செயல்படவில்லை என தமக்கு அதிருப்தி உள்ளதாகவும், அடுத்த கூட்டத்தில் அனைவரும் அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என ஆ.ராசா கூறினார். இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அதிமுகவில் இருந்து விலகி 100.க்கும் மேற்பட்டோர் அமைச்சர் நாசர் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.
No comments