மயிலாடுதுறை டிஎஸ்பி சஸ்பெண்ட்..... 23 பார்களும் மீண்டும் திறப்பு..... பாஜக குற்றச்சாட்டு
மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருடைய வாகனம் பறிக்கப்பட்ட நிலையில் மயிலாடுதுறை எஸ்.பி மீது அவர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்ததோடு நேர்மையாக செயல்பட்டதால் தான் தனக்கு இவ்வாறு நடந்தது என்றார்.
அதே நேரத்தில் மயிலாடுதுறையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 23 டாஸ்மாக் கடைகளை சுந்தரேசன் மூடிய தாகவும் அதனால் தான் திமுக அரசு அவரை சஸ்பெண்ட் செய்ததாகவும் பாஜகவினர் குற்றம் சாட்டிய நிலையில் ஒரு வீடியோ கூட அது தொடர்பாக வெளியானது.
இந்த நிலையில் தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டிஎஸ்பி சுந்தரேசன் மூடிய 23 பார்களுக்கும் திமுக அரசு தற்போது திறப்பு விழா நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டி ஒரு வீடியோவையும் வெளியிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் கூறப்பட்டிருப்பதாவது,
மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. சுந்தரேசன் அவர்களை இடைநீக்கம் செய்த உடனேயே மயிலாடுதுறையில் கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை நடத்தப்படுவதாக காணொளி வெளியாகி உள்ளது.
பட்டப்பகலில் பொதுவெளியில் டிஜிட்டல் பரிவர்த்தனையுடன் படுஜோராக இப்படி சட்டவிரோத மதுவிற்பனை செய்ய ஏதுவாக இருக்கத் தான் ஒரு நேர்மையான அதிகாரி மீது போலிக்குற்றச்சாட்டுகளை வைத்து
அரசு இடைநீக்கம் செய்ததா? இந்த சட்டவிரோத மது விற்பனையை கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் திரு. டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் அறிவாரா? இன்று கள்ளச்சந்தையில் மதுவிற்பனை, நாளை என்ன? திரு. சுந்தரேசன் அவர்கள் மூடிய 23 சட்டவிரோத பார்களின் திறப்பு விழாவா? சமூகநீதி குறித்து மேடைகளில் விளம்பரப்படுத்திவிட்டு, நேர்மையான காவல் அதிகாரிகளை விரட்டியடித்துவிட்டு, பின்பக்கம் சட்டவிரோத சாராய விற்பனையை ஊக்குவித்து, சட்டம் ஒழுங்கை சீரழிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்த திராவிட மாடல் ஆட்சி இருக்கும் வரை, தமிழகத்திற்கு என்றும் விடிவு காலம் இல்லை! என்று அவர் தெரித்துள்ளார்.
No comments