• Breaking News

    புளியரை அருகே முன்பகையால் ஒருவர் கொலை வழக்கில்.... 2 பேருக்கு இரட்டை ஆயுள்...... தென்காசி நீதிமன்றம் உத்தரவு


    புளியரை அருகே  முன்பகையால் ஒருவர் வெட்டிக்கொலை வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தென்காசி மாவட்டம், புளியரை அருகே உள்ள கற்குடி இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் புளியரை பகுதியில் உள்ள அனந்தகுளத்தில் மீன் குத்தகை ஏலம் எடுத்து அதன் மூலம் மீன்களைப் பிடித்து விற்பனை செய்து வந்துள்ளார்.  இந்தக் குளத்தை கடந்த காலங்களில் ஏலம் எடுத்து நடத்திக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த காளி, உதயகுமார், மாரித்துரை ஆகியோர் ஹரிஹரன் மீது ஆத்திரம் அடைந்துள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையில் பகை ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஹரிகரன் ஏலம் எடுத்துள்ள அனந்தகுளத்தில் மேற்படி நபர்கள் தண்ணீரில் விஷத்தை கலந்து மீன்களை கொன்றுள்ளனர்.

    இது பற்றி ஹரிகரன் புளியரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரிகளை கைது செய்துள்ளனர். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு முற்றி மோதல் ஏற்ப்பட்டுள்ளது. இது தொடர்பாக மீண்டும் ஹரிஹரன் கொடுத்த புகாரின் பேரில் சுப்பையா, மகேஷ், அடிவெட்டி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த 08.01.2017 அன்று இரவு 11.30 மணிக்கு ஹரிஹரன் வீட்டிற்கு அதே பகுதியைச் சேர்ந்த  வடகாசி மகன் உதயகுமார், மகாலிங்கம் மகன் மகேஷ், முகம்மது ஹனிபா மகன் நவாஸ்கான், சிங்காரவேலன் மகன் சங்கிலி, மற்றும் அவரது மகன் பாலகிருஷ்ணன் மற்றும் காசி ஆகிய 6 பேர்களும்  அத்துமீறி நுழைந்து அவர்கள்  மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஹரிஹரனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இதனால் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இது பற்றி புளியரை போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் 6 பேர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு தென்காசி மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி எஸ்.மனோஜ்குமார் விசாரித்தார். விசாரணையில் முன்விரோதம் காரணமாக ஹரிஹரனை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்தது உறுதியானது. முன்னதாக இந்த வழக்கில்  குற்றவாளிகளான உதயகுமார், மகேஷ், ஆகியோர் இறந்துவிட்டனர். மேலும் பாலகிருஷ்ணன் தென்காசி இளஞ்சிறார் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் நேற்று நீதிபதி மனோஜ் குமார் இந்த வழக்கில் குற்றவாளிகளான சங்கிலி (55) நவாஸ்கான் (30) ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.  மேலும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப் பட்டிருந்த காசி மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் சு.வேலுச்சாமி ஆஜராகி வாதாடினார்.

    No comments