ரூ.42 லட்சம் கொள்ளை..... அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கார் ஓட்டுனர் கைது.....
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ரூ.42 லட்சம் பணம் திருடப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கார் ஓட்டுநர் சுரேஷ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நபர் கைது செய்யப்பட்டிருப்பது அதிமுக வட்டாரத்திலும், மதுரை மாவட்ட மக்களிடையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் ஜெயேந்திரன் கதிர்வேல் என்பவர், மதுரை விளாங்குடி பகுதியில் உள்ள அபார்ட்மென்ட்டில் தங்கியிருக்கிறார். கடந்த ஜூன் 17ஆம் தேதி, கோயில் திருவிழாவுக்காக குடும்பத்துடன் சொந்த ஊரான போடிக்கு சென்ற அவர், ஜூன் 21ஆம் தேதி திரும்பியபோது வீட்டு முன் கதவு உடைக்கப்பட்டதையும், வீட்டில் இருந்த ரூ.42 லட்சம் பணம் திருடப்பட்டதையும் கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மதுரை கூடல்புதூர் போலீசில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களை வைத்து விசாரணை நடைபெற்றது. இதில், மதுரை பொதும்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ், அதாவது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கார் ஓட்டுநர் என்ற தகவல் வெளியானது. அவருடன் சேர்ந்து பிரகாஷ், விவேக் ஆனந்த், யோகேஷ் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க வேண்டும் என கோரியதின் பேரில், நீதிபதி ஹரிஹரசுதன் அவர்களை சிறையில் அடைக்கும் உத்தரவு பிறப்பித்தார். அதிமுக முன்னாள் அமைச்சரின் நெருக்கடியான நபர் இவ்வாறு கொள்ளை வழக்கில் சிக்கியிருப்பது, சட்டம் ஒழுங்கு வட்டாரங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
No comments