திருப்புவனம் இளைஞர் உயிரிழப்பு...... கைதான 5 போலீசாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்.....
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 28). தங்க நகை திருட்டு வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் மதுரை ஐகோர்ட்டு கூடுதல் பதிவாளர் ஜெனரல் (நீதித்துறை), நிர்வாக நீதிபதியின் தனி செயலாளர் ஆகியோருக்கு மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் ஆர்.ஏ.எஸ்.செந்தில்வேல் நேற்று முன்தினம் தபாலில் ஒரு மனு அனுப்பி இருந்தார்.
அந்த மனுவில், "மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமாரின் மரணம், இந்த சமூகத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியையும் உலுக்கும் விதமாக அமைந்து உள்ளது. அவர் சித்ரவதை செய்து கொல்லப்பட்டதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன. போலீஸ் விசாரணைக்கு சென்றபோது ஏற்பட்ட சித்ரவதையால் அவர் இறந்துள்ளார் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.
இதுதொடர்பாக அதிகாரிகள் முன்வைத்த விளக்கம் முரண்பாடாகவும், நம்பகத்தன்மை இல்லாமலும் உள்ளது. இது குற்றவாளிகளை பாதுகாக்கும் முயற்சியாக தெரிகிறது. சில ஆண்டுகளாக போலீஸ்நிலைய மரணங்கள் தொடர்கின்றன. காவல் மரணங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றம் என ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்குகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களை தடுக்க சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. ஆனாலும் ஆண்டுதோறும், போலீஸ் நிலைய மரணங்கள் அதிகரிக்கும் அபாயகரமான போக்கு நிலவுகிறது. பல்வேறு காவல் மரணங்கள், முதல்கட்ட விசாரணை அல்லது வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பாகவே நடக்கின்றன. போலீஸ்நிலைய மரணங்கள், சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டினை பிரதிபலிக்கின்றன. எனவே இந்த சம்பவம் குறித்து மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.இதேபோல் இந்த சம்பவம் குறித்து மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோரிடம் வக்கீல்கள் மாரீஸ்குமார், ராஜராஜன், அருண்சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் முறையிட்டனர்.
அப்போது வக்கீல்கள் கூறுகையில், போலீசார் கடுமையாக தாக்கியதில்தான் அஜித்குமார் பரிதாபமாக இறந்துள்ளார். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் விசாரணைக்கு சென்றவர்களில் 24 பேர் (போலீஸ் நிலைய மரணம்) இறந்து உள்ளனர். தொடரும் போலீஸ் நிலைய மரணங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர் எனவும் தெரிவித்தனர்.
அப்போது நீதிபதிகள், போலீஸ் நிலையங்களில் சில ஆண்டுகளில் 24 சந்தேக மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து தங்களது தரப்பு பதில் என்ன? என அரசு வக்கீலிடம் கேள்வி எழுப்பினர். அது மட்டுமில்லாமல் இறந்த நபர் பயங்கரவாதியா? அவரை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று தாக்கியதில் அவர் கொல்லப்பட்டாரா? சாதாரண வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவரை கடுமையாக தாக்கியது ஏன்? எனவும் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
இது தொடர்பாக பதில் அளிக்க அரசு வக்கீல் உரிய அவகாசம் கோரினார்.
பின்னர் நீதிபதிகள் இந்த விவகாரம் சம்பந்தமாக மனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று மதுரை அமர்வில் நடைபெறுகிறது.
இதனிடையே மடப்புரம் இளைஞர் மரண வழக்கில் கைதான 5 போலீசாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். மரண வழக்கு தொடர்பாக, அதிகாலை 4 மணி வரை ஆவணங்கள் தயார் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் 5 பேரையும் வேனில் ஏற்றி, திருப்புவனம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன் போலீசார் ஆஜர் செய்தனர். இதனையத்தொடர்ந்து 5 போலீசாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு பிரேத பரிசோதனை அடிப்படையில் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக 6 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் 5 போலீசார் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
No comments