சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி. சுந்தரேசனுக்கு நெஞ்சுவலி
உயர் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் கூறியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருன்றனர்.
வழக்கின் முழுவிவரம்:-
மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரேசன், தனது வாகனத்தை அதிகாரிகள் பறித்துக்கொண்டதாக கூறி பணிக்கு நடந்து வந்த 'வீடியோ' வைரலானது. அவர் பயன்படுத்திய அரசு வாகனம் திரும்ப பெறப்பட்டது ஏன்? என்பது விவாத பொருளானது. இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரேசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர், 'கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐ.ஜி. செந்தில்வேலன் ஆகிய உயர் அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அழுத்தம் தருகிறார். அலுவலக வாகனத்தை பறித்து மனரீதியாக சித்ரவதை செய்கிறார் என்று பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
இந்த விவகாரம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயர் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததால் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரேசன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியானது. அதன்படி தஞ்சை மண்டல டி.ஜ.ஜி. ஜியாவுல் ஹக் விசாரணை நடத்தி, போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரேசன் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மண்டல ஐ.ஜி.க்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார்.
இதைத்தொடர்ந்து சுந்தரேசனை போலீஸ் துணை சூப்பிரண்டு பணியில் இருந்து இடைநீக்கம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவில், உயர் அதிகாரிகள் மீது அடிப்படை ஆதாரமற்ற உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரேசன் கூறியுள்ளார். உயர் அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறாமல் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். எனவே ஒழுங்கீனமாக செயல்பட்டதற்காக அவர் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments