திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் பாரதப் பிரதமர் மோடிக்கு ஆசிகளும்,வாழ்த்துகளும் கூறியுள்ளார்
மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதினம் பாரத பிரதமருக்கு ஆசிகளும் வாழ்த்துச் செய்தியும் சைவ சித்தாந்தத்தைப் பின்பற்றிய சோழப் பேரரசர் இராஜேந்திர சோழனின் ஆடித் திருவாதிரைப் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க, தாங்கள் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருகைதந்தது மட்டற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது.சோழப் பேரரசர் நினைவாக தாங்கள் நாணயம் வெளியிட்டதும், இரு சோழப் பேரரசர்களுக்கு மத்திய அரசின் சார்பில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும் என்ற தங்களின் அறிவிப்பும் தமிழர்களின் பெருமிதத்தை அதிகரித்துள்ளது.
செல்லும் இடம் எல்லாம் தமிழர்களின் பண்பாடு, தமிழ் மொழியின் உன்னதம், திருக்குறளின் மேன்மை பற்றிப் பேசி வரும் தாங்கள், இந்த முறை, வாழ்வியல் பிரச்சனைகளுக்கு சைவ சித்தாந்தம் தீர்வளிக்கிறது என்ற உயர்ந்த உண்மையை உலகமே அறியும்படி உரக்கக் கூறியுள்ளீர்கள்.பாரதத்தின் சமயம் மற்றும் தத்துவ வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும்.திருக்கோயில்கள், அவை சார்ந்த பண்பாடுகள் இன்றும் நின்று நிலவுகின்றன என்றால் அதற்கு சைவ ஆகமங்களே முதற்காரணம். அந்த ஆகம வழியில் தான் சைவ சித்தாந்த தத்துவமும் தோன்றி பாரதமெங்கும் பரவி,பாரதத்தை சைவ பூமி என்று சொல்லும்படி மாற்றியுள்ளது.மேலும், தமிழ்நாட்டில் ஆடல்வல்லான் திருவடிவமே சைவ சித்தாந்தத் தத்துவக் கருத்தாகப் போற்றப்படுகிறது.அதையும் தாங்கள் சுட்டிக் காட்டியுள்ளீர்கள்.பாரதத்தின் தத்துவ வரலாற்றில் கடந்த 200 ஆண்டுகளாகப் பேசப்படாத ஆகம ரீதியிலான தத்துவ மரபு இனி விரிவாகப் பேசப்படுவதற்கு தொடக்கமாக தாங்கள் சைவ சித்தாந்தத்தின் உயர்வை இன்று எடுத்துரைத்துள்ளீர்கள்.
தாங்கள் சொன்னது போல, தமிழகம் இன்று சைவ சமயத்தின் மையமாகத் திகழ்கிறது என்றால் அதற்கு காரணம், சிவபக்தியில் இருந்து இம்மியளவும் மாறாத சோழ பரம்பரை தான் என்பதில் ஐயமில்லை.1947-ஆம் ஆண்டு பாரத நாடு சுதந்திரம் பெற்றபோது நம் ஆதீனத்தால் செங்கோல் வழங்கியருளிச் சிறப்பிக்கப் பெற்றதையும்,அந்த அரிய நிகழ்வினை நினைவுகூர்ந்து போற்றும்வகையில், 2023-ஆம் ஆண்டு நாம் ஆசீர்வதித்து வழங்கியருளிய செங்கோலினை நாடாளுமன்றத்தில் நிறுவிச் சிறப்பித்ததையும் குறிப்பிட்டுத் தாங்கள் உரையாற்றியுள்ளமை மகிழ்வை தந்துள்ளது.தமிழ்ப் பண்பாடு, தமிழ்மொழியின் பெருமை,சைவ சித்தாந்தத்தின் உயர்வு ஆகியவற்றை இன்று உலகம் தங்கள் மூலம் உணர்ந்து கொண்டிருக்கும் என நம்புகிறோம். தங்களின் தேசத் தொண்டு என்றும் தொடர,ஸ்ரீ ஞானமாநடராசப் பெருமானின் திருவடிகளை வழுத்துகிறோம் என்று வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்கள்.
No comments