தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி.க்கான பட்டியலை தயாரிக்கும் தமிழக அரசு
தமிழக டி.ஜி.பி.,யாக உள்ள சங்கர் ஜிவால், ஆகஸ்ட் 31ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதனால், புதிய டி.ஜி.பி., யார் என்ற கேள்வி இருந்து வருகிறது. டி.ஜி.பி.,கள் நியமனம் தொடர்பாக புதிய வழிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது. உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப அதிகாரிகளின் தேர்வும் இருக்கும்.
புதிய விதியின்படி, நிலை-16 ஊதிய விகிதப்படி டி.ஜி.பி., அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் மட்டுமே தகுதியுடையவர்கள். முன்னதாக, 30 ஆண்டுகள் சேவையை முடித்த அனைத்து ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் பட்டியலில் சேர்க்க உரிமை பெற்றிருந்தனர். இப்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.
டி.ஜி.பி., பதவிக்கான அதிகாரிகளின் பட்டியலை தயார் செய்யும் பணியில் தமிழக அரசு மும்முரம் காட்டி வருகிறது. சீனியாரிட்டி அடிப்படையில் , டி.ஜி.பி.,கள் சீமா அகர்வால், ராஜீவ் குமார் மற்றும் சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய மூவரும் முதலிடத்தில் உள்ளனர். இந்த மூன்று அதிகாரிகளும் மத்திய அரசில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள்.
டி.ஜி.பி.,கள் பிரமோத் குமார் மற்றும் அபய் குமார் சிங் ஆகியோரின் பணிக்காலம் ஆறு மாதங்களுக்கும் குறைவாக இருப்பதால் அவர்களைக் கருத்தில் கொள்ள முடியாது. தகுதி வாய்ந்த அதிகாரிகளின் பட்டியல் இந்த வாரம் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என போலீஸ் உயர் அதிகாரிகள் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவிருப்பதால், புதிய டி.ஜி.பி., நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.
காவல் துறை, லாக்அப் டெத் அல்லது சித்திரவதை தொடர்பான பல சம்பவங்களுக்காக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறது. தேர்தல் காலத்தில் போலீசார் மீதான விமர்சனங்கள் அதிகரிக்கவே, செய்யும். அதை சமாளித்து போலீஸ் துறையை திறம்பட நிர்வகிப்பது, புதிதாக பொறுப்பேற்கும் அதிகாரிக்கும் பெரும் சவாலாக இருக்கும்.
உள்துறை அமைச்சகம் தனது திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில் நிர்ணயித்துள்ள அளவுகோல்களில் ஒன்று, உயர் பதவிக்கு பரிசீலிக்கப்படும். ஒரு அதிகாரி, சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறை, பெண்களுக்கு எதிரான குற்றப் பிரிவு, பொருளாதார குற்றப் பிரிவு, சைபர் குற்றப் பிரிவு, அரசு ரயில்வே காவல்துறை, ஊழல் தடுப்பு, விஜிலென்ஸ், உளவுத்துறை, சிறப்புப் பிரிவு, பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு, பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு, மத்திய புலனாய்வுப் பிரிவு மற்றும் தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட பிரிவுகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியமர்த்தப்பட்டிருக்க வேண்டும்.
இதன் அடிப்படையில், புதிய டி.ஜி.பி., நியமனம் செய்யப்படுவார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments