தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு 101 காற்றாலை இறக்கைகள் கப்பலில் ஏற்றுமதி செய்து சாதனை - MAKKAL NERAM

Breaking

Saturday, August 23, 2025

தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு 101 காற்றாலை இறக்கைகள் கப்பலில் ஏற்றுமதி செய்து சாதனை

 


தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் காற்றாலை இறக்கைகளை கையாளுவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காற்றாலை இறக்கைகளை கையாளுவதற்கு வசதியாக எந்திரங்கள், இடவசதி உள்ளிட்டவை இருப்பதால், ஆண்டுதோறும் வ.உ.சி. துறைமுகத்தில் காற்றாலை இறக்கைகள் கையாளுவது அதிகரித்து வருகிறது.


கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 1,099 இறக்கைகள் கையாளப்பட்டு இருந்தன. இந்த ஆண்டு இதுவரை 1,158 காற்றாலை இறக்கைகள் கையாளப்பட்டு உள்ளன. இது கடந்த ஆண்டை விட 5 சதவீதம் அதிகம் ஆகும்.


இந்த நிலையில், நேற்று முன்தினம் ஒரே கப்பலில் 101 காற்றாலை இறக்கைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது. சுமார் 59.18 மீட்டர் நீளம் கொண்ட காற்றாலை இறக்கைகள் எம்.வி. பி.பி.சி சந்தியாகு என்ற கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கு முன்பு ஒரே கப்பலில் 75 காற்றாலை இறக்கைகளே ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன.


இது குறித்து வ.உ.சி. துறைமுக ஆணைய துணைத்தலைவர் ராஜேஷ் சவுந்தரராஜன், துறைமுகத்தின் அனைத்து பங்குதாரர்களையும், அவர்களின் பங்களிப்புக்கும் வாழ்த்து தெரிவித்தார். ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒரே கப்பலில் 101 காற்றாலை இறக்கைகளை ஏற்றுமதி செய்த இந்த புதிய சாதனை துறைமுகத்தின் செயல்திறனையும், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கை ஆதரிக்கும் வ.உ.சி. துறைமுகத்தின் அர்ப்பணிப்பையும் எடுத்துக் காட்டுகிறது என்று கூறி உள்ளார்.

No comments:

Post a Comment