ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..... 17 பேரின் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்டு - MAKKAL NERAM

Breaking

Wednesday, August 6, 2025

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..... 17 பேரின் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்டு

 


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி நாகேந்திரன் உள்ளிட்ட 17 பேர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் நடைபெற்று வந்தது.காவல்துறை தரப்பில், சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை கருத்தில்கொண்டே 26 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாக வாதிடப்பட்டது.


மனுதாரர்கள் தரப்பில், தாங்கள் கைது செய்யப்பட்டதற்கும், குண்டர் சட்டத்தில் அடைப்பதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கும் இடையேயான கால தாமதத்தை கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தனர். மேலும், மனதை செலுத்தாமல் இயந்திர தனமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இந்தநிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். அதே சமயத்தில், இவர்களின் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்ட காரணத்தினால் மட்டுமே இவர்களுக்கு ஜாமீன் வழங்கி விட கூடாது என்றும், வழக்கின் தீவிரத்தை முழுமையாக கருத்தில் கொண்டே ஜாமீன் மனுக்கள் மீது முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment