அதிமுக ஒன்றிணைந்தால் 2026ல் வெற்றி நிச்சயம்...... சசிகலா நம்பிக்கை - MAKKAL NERAM

Breaking

Saturday, August 30, 2025

அதிமுக ஒன்றிணைந்தால் 2026ல் வெற்றி நிச்சயம்...... சசிகலா நம்பிக்கை

 


அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைந்தால் 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி என சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-


“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் ,தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும், ஏழை எளிய மக்களுக்கான ஒரு இயக்கமாகவும் நம் இருபெரும் தலைவர்களின் தலைமையில் சிறப்புடன் செயலாற்றி வந்துள்ளது. கழகத்தை தோற்றுவித்து தொடர் வெற்றிகளைப் பெற்று, 10 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தமிழ் மண்ணில், மக்களுக்கான மகத்தான நல்லாட்சியை நடத்தியவர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.


புரட்சித்தலைவரின் மறைவிற்கு பிறகு மாற்றார் பலரும் இனி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் இயக்கமே இருக்காது. அது சிதறுண்டு விடும் என கனவு கண்டு கொண்டிருந்த நேரத்தில், இதோ தாயாக நான் இருக்கிறேன். கழகத்தையும் தொண்டர்களையும், தமிழக மக்களையும் காப்பேன் என சூளுரைத்து, விரோதிகளின் சதிச்செயல்களையெல்லாம் துணிச்சலுடன் முறியடித்து, சுமார் 35 ஆண்டுகளாக கழகத்தை கட்டி காப்பாற்றி, சேதாரமின்றி வளர்த்தெடுத்து, 6 முறை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்று அனைத்துத் தரப்பு மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்று நல்லதொரு ஆட்சியை வழங்கியவர் நம் இதயதெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா.


இவற்றிற்கெல்லாம் எனது தன்னலமற்ற பங்கும் அடங்கியிருக்கிறது என்று எண்ணிப்பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். “ஆண்டுகளை கடந்தும் அனைத்தித்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நின்று நிலைத்திருக்கும், அண்ணாவின் உருவம் பொறிந்த கொடி என்றும், எங்கும், எப்பொழுதும் பட்டொளி வீசி பறக்கும்" என்று புரட்சித்தலைவர் கூறினார். "இன்னும் 100 ஆண்டுகளையும் கடந்து மக்களுக்காகவே நம் இயக்கம் இயங்கும்” என்று தம் புரட்சித்தலைவி சட்டப்பேரவையிலேயே குளுரைத்தார்.


ஆனால் இன்று நிலைமை வேறாக உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு ஒளிர்ந்த நம் இயக்கம், இன்றைக்கு எவனமாக பேசும் அளவுக்கு இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. நம் இருபெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் இன்று கழகம் பெரும் சோதனைக்கு ஆளாகி உள்ளது. புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி ஆகியோரால் அடையாளம் காட்டப்பட்ட, அவர்கள் இருவரது வழியிலும் நடைபோட்ட நம்மில் சிலர் பிரிந்து கிடக்கிறோம்.


கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்கள், விலகி இருப்பவர்கள் என அனைவரும் கரம் கோர்த்து ஒன்றிணைந்து நம் எதிரியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் மனமாச்சர்யங்களை மறந்து, கருந்து வேறுபாடுகளை கடந்து கட்சி முக்கியம் கட்சியின் நலன் முக்கியம், கட்சியின் எதிர்காலம் முக்கியம் கட்சியின் வெற்றி முக்கியம் அந்த வெற்றி தி.மு.க. என்ற தீய சக்தியை வரும் சட்டமன்ற தேர்தலில் வீழ்த்துவதாக அமைவது மிக முக்கியம் என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டிய முக்கிய தருணம் இது.


எந்த தி.மு.க.வை ஆட்சி அதிகாரத்திலிருந்தும், அரசியல் களத்திலிருந்தும் அப்புறப்படுத்த வேண்டும் என்று புரட்சித்தலைவரும். புரட்சித்தலைவியும் பாடுபட்டார்களோ, அந்த தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கக் கூடிய சூழலை நாம் உருவாக்கி விடக்கூடாது. அதனால்தான் கழகம் ஒன்றுபட வேண்டும் என்று தொடர்ந்து நான் குரல் கொடுத்து வருகிறேன். எனக்கு எந்த சுயநலமும் கிடையாது மக்கள் நலத்தை மட்டுமே எப்பொழுதும் நான் சிந்திக்கின்றேன்.


கழகம்தான் எனது ஒரே குடும்பம். யாராலும் என்னை ஒரு வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது. நான் எப்பொழுதும் சுயமாக சிந்தித்து அதன்படி செயல்படுகிறேன். எனக்கு நம் கழகத்தினர் யார் மீதும் எந்தவித கோபமோ, வருத்தமோ இல்லை. நான் இதைவிட கடினமான சூழ்நிலைகளையெல்லாம் எனது சிறு வயதிலேயே கடந்து வந்துவிட்டேன். நம் இருபெரும் தலைவர்களிடம் நான் பெற்ற பயிற்சி என்னை பக்குவப்படுத்தி இருக்கிறது.


கழகத்தின் நிறுவனத்தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜி.ஆரின் அணுகுமுறை எனக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. உங்களில் ஒருத்தியாக உங்களின் சகோதரியாக இருந்து அனைவருடன் ஒன்றிணைந்து கழகப் பணியாற்றவே நான் விரும்புகிறேன். கட்சியின் நலன் கருதியும். தமிழக மக்களின் நலன் கருதியும் தான் இதுநாள் வரை ஒவ்வொரு முடிவுகளையும் நாள் மேற்கொண்டு இருக்கிறேன்.


கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது கூட கழகம் வெற்றிபெற என்னால் எந்தவித இடையூறும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று எண்ணிதான் தேர்தல் களத்திலிருந்து ஒதுங்கியிருந்து அமைதி காத்தேன் ஆனால் கழகம் வெற்றியை பெற முடியவில்லை. அதன்பிறகு நடந்த எந்த தேர்தலிலும் கழகம் இன்றுவரை வெற்றி பெறமுடியாமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.


ஆனால், இதை இப்படியே இனியும் வேடிக்கை பார்ப்பது நம் இருபெரும் தலைவர்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகமாகிவிடும். மேலும், தமிழக மக்களுக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய அநீதியாகிவிடும். எனவே "நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இவி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்" என்ற மனதுடன் அனைவரும் ஒன்றிணைவதுதான், தமிழக மக்களுக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய உதவியாக அமையும். தம் இருபெரும் தலைவர்களின் எண்ணங்களையும் அது ஈடேற்றிடும்.


இது தொண்டர்களின் இயக்கம், தொண்டர்களின் முடிவே இறுதியானது, உறுதியானது. அவர்களின் முடிவுக்கு கட்டுப்பட்டு நாம் அனைவரும் ஒற்றுமையுடன் கழகத்தை வழிநடத்தி செல்வோம். ஆடுகள் மோதிக்கொள்ளட்டும் என இரத்தம் குடிக்கும் ஓநாய்கள் காத்துக்கிடக்கின்றன. அதற்கு நாம் ஒருபோதும் இடம் தந்து விடக்கூடாது.


"ஊரு ரெண்டுபட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்ற பழமொழிக்கேற்ப தி.மு.க. இப்போது குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது. ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் தமிழ்நாட்டின் ஆகப்பெரிய கட்சி என்பதை நம் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் பலமுறை நிரூபித்து இருக்கிறார்கள். அந்த வலிமையை மீண்டும் நாம் பெற்றாக வேண்டும்.


ஒன்றுபட்ட வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத்தான் தமிழக மக்களும் கழகத்தொண்டர்கள் அனைவரும் விரும்புகிறார்கள். பல்வேறு கூட்டணி கட்சியினரும் இதைத்தான் விரும்புகின்றனர். அனைவரது விருப்பத்திற்கேற்ப ஒன்றுபட்ட வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அசுர பலத்துடன் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை நாம் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம். மீண்டும் கழக ஆட்சி அமைவது உறுதி. எனவே கட்சியில் உள்ள முன்னோடிகள் முதல் கடைக்கோடி தொண்டார்கள் வரை ஒவ்வொருவரும் சிந்தியுங்கள். வெற்றிக்கான பாதையில் பயணித்திடுவோம்.”


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment