விபத்து, உயிர்காக்கும் பணியில் அம்மாபட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் ஆம்புலன்ஸ்..... டிரைவராகவும் மெடிக்கல் லேப் டெக்னீசியனாகவும் அசத்தும் எம்பிஏ பட்டதாரி..... - MAKKAL NERAM

Breaking

Tuesday, August 26, 2025

விபத்து, உயிர்காக்கும் பணியில் அம்மாபட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் ஆம்புலன்ஸ்..... டிரைவராகவும் மெடிக்கல் லேப் டெக்னீசியனாகவும் அசத்தும் எம்பிஏ பட்டதாரி.....


புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில் இயங்கும் தவ்ஹீத் ஜமாஅத் ஆம்புலன்ஸ் மூலம் விபத்து மற்றும் உயிர்காக்கும் பணியில் திறம்பட செயல்படுகிறது. இந்த ஆம்புலன்சில் மெடிக்கல் லேப் டெக்னீசியன் மற்றும் எம்பிஏ படித்த பட்டதாரி டிரைவராக செயல்படுகிறார்.


புதுக்கோட்டை மாவட்ட கிழக்கு கடற்கரை சாலைகளில் தினமும் விபத்துக்கள் நடந்து வருகிறது. கட்டுமாவடி முதல் ஏனாதி வரையிலான  கடலோரப் பகுதிகளில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளில் புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதியின் மையப்பகுதியில் உள்ள அம்மாபட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் ஆம்புலன்ஸ் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று விபத்தில் சிக்கியவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இது தவிர வடக்கே தஞ்சாவூர் மாவட்ட பகுதியான 16 கிமீ தூரத்திலுள்ள சோமநாதன்பட்டினம் பகுதியிலும், மீமிசல் பகுதியிலும் நடந்த விபத்தில் 5 நிமிடத்திற்க்குள் சென்று மீட்கப்பட்டுள்ளனர். இந்த உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் மூலமாக விபத்தில் சிக்கியவர்கள், நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருப்பவர்கள், உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசரமாக மேல்சிகிச்சை தேவைப்படுபவர்கள் ஆகியோர்கள் நோயாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சென்னை, பாண்டிச்சேரி, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, இராமநாதபுரம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, காரைக்குடி, மணமேல்குடி  ஆகிய பகுதிகளிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளின் விருப்பப்படி அழைத்துச் செல்லப்படுகிறது. ஆக்சிஜன் வைத்த நோயாளிகள், இரத்தம் மற்றும் குளுக்கோஸ் ஏறும் நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு, நோயாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப சைரன் ஒலி, ஆம்புலன்ஸ் செல்லும் வேகம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ மாற்றப்படுகிறது. 


சில சமயங்களில் நோயாளிகளுக்கு இடையூறாக இருக்கும் பட்சத்தில் சைரன் ஒலி நிறுத்தப்பட்டு நகரப் பகுதிகளிலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளிலும் குறைவான ஒலியில் சைரன் வைக்கப்படுகிறது. இந்த ஆம்புலன்ஸ் ஃபோர்ஸ் கம்பெனியின் குரூசர் ட்ராக்ஸ் BS6 வகையை சேர்ந்ததாகும். இது ஒரு லிட்டர் டீசலுக்கு 8 கிலோமீட்டர் மட்டுமே மைலேஜ் தருவதால் டீசல், அட்ப்ளூ உள்ளிட்ட எரிபொருளுக்கு மட்டுமே குறைந்த கட்டணமாக வாடகை வசூலிக்கப்படுகிறது.


இந்த ஆம்புலன்ஸில் ஓட்டுனராக இருப்பவர் ராஜா முஹம்மது. கட்டுமாவடியை சேர்ந்தவர் தற்போது அறந்தாங்கியில் வசித்து வருகிறார். பணியின் போது 24 மணி நேரமும் ஆம்புலன்சில் தயாராக இருக்கிறார். இவர் மெடிக்கல் லேப் டெக்னீசியன் படித்து 13 வருடங்களுக்கு மேலாக மணமேல்குடியிலுள்ள மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார். 5 வருடங்கள் சவுதி அரேபியாவில் தனியார் மருத்துவமனையில் மெடிக்கல் லேப் டெக்னீசியனாக பணியாற்றியுள்ளார். இது தவிர தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பாடப்பிரிவில் மருத்துவமனை நிர்வாகவியல் பட்டம் பெற்றுள்ளார். அதே பல்கலைக்கழகத்தில் பிஜிடிசிஏ ஒரு வருட கணிப்பொறி பயன்பாட்டியல் பட்டமும் பெற்றுள்ளார்.    தஞ்சாவூர் ரெட் கிராஸ் மற்றும் மணப்பாறை பகுதிகளிலுள்ள பயிற்சி மையங்களில் முதலுதவி சான்றிதழ் பெற்றுள்ளார். சிடி ஸ்கேன், எக்ஸ்ரே போன்றவற்றில் பயிற்சி பெற்று தமிழக அரசின் சான்றிதழும் பெற்றுள்ளார். தனியார் மையத்தில் ஒரு வருட அக்குபஞ்சர் பயிற்சியும் பெற்றுள்ளார். டிரைவிங் மீது ஆர்வம் கொண்ட இவர் பணிபுரிந்து கொண்டே ஓட்டுநர் பயிற்சி பெற்று லைட், பேட்ஜ், ஹெவி என அடுத்தடுத்து லைசென்ஸ் பெற்றுக் கொண்டார். சவுதியில் பணிபுரிந்த காலத்தில் சவுதி அரேபியாவின் ஓட்டுநர் உரிமமும் பெற்றுள்ளார். 

2012ம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ்காக தேர்ந்தெடுக்கப்பட்டு 74 வது பேட்ஜில் பைலட் ஓட்டுனர் பயிற்சி பெற்று சென்னையில் பணியாற்றியுள்ளார். அதே வருடம் கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் நடைபெற்ற ஓட்டுநருக்கான நேர்முக தேர்வில் உடல் தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் செய்முறை தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர 5 லட்சம் லஞ்சம் கேட்டதால் பணியை புறக்கணித்தார். கடந்த ஆண்டு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநருடன் நடத்துனர் பணிக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி வெற்றி பெற்று கடைசி நேரத்தில் போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தேர்வு எழுதியவர்கள் தற்காலிகமாக ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு சேர அழைப்பு விடுக்கப்பட்டு அறந்தாங்கியில் அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக நடத்துனராக பணியாற்றியிருக்கிறார்.


 மீண்டும் இந்த ஆண்டு ஜூலை மாதம் டிஎன்பிஎஸ்சி நடத்திய அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கான ஓட்டுநர் உடன் நடத்துனர் பணிக்கு தேர்வு எழுதி கடந்த வாரம் 20ம் தேதி வெளியிட்ட தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்றுள்ளார். பல டிகிரியும், டிப்ளமோவும் படித்து அதில் அனுபவம் பெற்று, வாகனம் இயக்குவதிலும், நோயாளிகளை கவனிப்பதிலும் பல அனுபவம் வாய்ந்தவர் ஆம்புலன்ஸ் ஓட்டுவது அதில் பயணிக்கும் நோயாளிகளுக்கு பயனுள்ளதாக அமைகிறது. ஆபத்தான நோயாளிகளை அவசரமாக கொண்டு செல்லும்போது நோயாளியை கண்காணிக்க சில சமயங்களில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு பல்ஸ்ஆக்சிமீட்டர் மூலம் நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறது.


 டிரைவர் என்றாலே மதிப்பு குறைவாக பார்க்கப்படும் இந்த காலகட்டத்தில் டிகிரி, டிப்ளமோ படித்து ஆம்புலன்ஸ் ஓட்டுவது பொதுமக்களின் சேவைக்காகவே பணி செய்கிறேன் என்று கூறுகிறார். கடந்த ஒரு வருடமாக ஆம்புலன்ஸ் ஓட்டும்போது பல சிக்கலான, ஆபத்தான நோயாளிகளை காப்பாற்றி, ஆம்புலன்ஸில் செல்லும்போது இதுவரை ஒரு நோயாளி கூட உயிரிழந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment