ஆவணி மாத பூஜைகாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் 21-ந் தேதி வரை சிறப்பு பூஜை - MAKKAL NERAM

Breaking

Sunday, August 17, 2025

ஆவணி மாத பூஜைகாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் 21-ந் தேதி வரை சிறப்பு பூஜை

 


சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.


தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நடை திறப்பை தொடர்ந்து நேற்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.


கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதிஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜை வழிபாடுகள் நடைபெறும். இந்நாட்களில் தந்திரி தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் உட்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.


அன்றைய தினம் அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். சபரிமலை அய்யப்பன் கோவில் மற்றும் பம்பை கணபதி கோவில்களுக்கான புதிய கீழ் சாந்திகள் தேர்வு செய்வதற்கான குலுக்கல் இன்று காலை 7 மணிக்கு தேவஸ்தான கமிஷனர் சுனில்குமார் தலைமையில் நடைபெறும். அதேபோல் இனி ஒரு வருட காலத்திற்கு சபரிமலை தந்திரியாக கண்டரரு குடும்பத்தை சேர்ந்த மகேஷ் மோகனரு திருப்பணிகளை நடத்துவார்.


ஆவணி மாத பூஜையை முன்னிட்டு பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஓணம் பண்டிகை சிறப்பு பூஜை வழிபாட்டையொட்டி அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (செப்டம்பர்) 3-ந் தேதி மாலையில் மீண்டும் திறக்கப்படும். 7-ந் தேதி வரை வழிபாடுகள் நடைபெறும்.


இந்நாட்களில் சபரிமலை செல்ல பத்தனம்திட்டா, கொட்டாரக்கரை, செங்கன்னூர், திருவனந்தபுரம், கோட்டயம் உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கேரள அரசு பஸ்கள் இயக்கப்படும்.

No comments:

Post a Comment