அன்புமணியின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி..... பாமக பொதுக்குழுவில் 37 தீர்மானங்கள்..... அதிரடி காட்டிய ராமதாஸ் - MAKKAL NERAM

Breaking

Sunday, August 17, 2025

அன்புமணியின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி..... பாமக பொதுக்குழுவில் 37 தீர்மானங்கள்..... அதிரடி காட்டிய ராமதாஸ்

 


புதுச்சேரியை அடுத்த பட்டானூரில் உள்ள சங்கமித்ரா திருமண மண்டபத்தில் இன்று காலை 11 மணிக்கு பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், 200-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் என மொத்தம் 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.


அண்மையில் அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அடுத்த ஓராண்டு தலைவர் பதவியில் அவர் நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று ராமதாஸ் தலைமையில் கூட்டம் நடந்திருப்பது சிறப்பு கவனத்தை ஈர்த்தது.


இந்தக் கூட்டத்தில் மொத்தம் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக, புதிய விதி 35 கொண்டு வரப்பட்டு, எதிர்காலத்தில் நடைபெறும் சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதா, கூட்டணியில் செல்லுவதா என்பதை முடிவு செய்யும் முழு அதிகாரம் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ராமதாஸுக்கு வழங்கப்பட்டது. அதோடு, தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் ராமதாஸுக்கே வழங்கப்பட்டது. இதன்மூலம் அன்புமணியின் தலைமை குறித்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.


இன்று நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களில் சில:


பாமக நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்தும் தலைவராக இருப்பது ஒருமனதாக உறுதி செய்யப்பட்டது.


2026 சட்டமன்ற தேர்தலில் பாமக அதிக இடங்களில் வெற்றி பெற உரிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வலுவான கூட்டணியை உருவாக்க ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது.


வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% தனி இட ஒதுக்கீட்டை சட்டமாக கொண்டு வந்து நிறைவேற்ற வலியுறுத்தி, அதை நடைமுறைப்படுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.


தமிழக அரசு உடனடியாக ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.


இதனுடன், பல்வேறு சமூக, அரசியல், நிர்வாக தொடர்பான கோரிக்கைகள் மற்றும் திட்டங்களும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. பாமக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்தப் பெரிய மாற்றம், அடுத்தடுத்த தேர்தல் சூழலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment