காலா படம் மூலம் தமிழில் பிரபலமான பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியின் சகோதரர் ஆசிப். இவர் டெல்லி, நிஜாமுதீன் பகுதியில் ஜங்புரா போகல் என்ற இடத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் அவருடைய வீட்டின் பிரதான வாசலுக்கு முன்னால் இரு சக்கர வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக சில நபர்களுக்கும், ஆசிப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின்போது அந்த நபர்கள், ஆசிப்பை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.
அதில் படுகாயமடைந்த ஆசிப் ஆபத்தான நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த நிஜாமுதீன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ஆசிபின் மனைவி சைனாஸ் குரேஷி இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் ஏற்கெனவே இதே பார்க்கிங் பிரச்சினைக்காக ஆசிப்புடன் தகராறு செய்துள்ளனர். இன்று (நேற்று) ஆசிப் வேலையிலிருந்து திரும்பி வந்த போது, வீட்டின் பிரதான நுழைவு வாசலுக்கு முன்னால் பக்கத்து வீட்டுக்காரரின் இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததை பார்த்துள்ளார். பின்னர் அந்த வாகனத்தை அங்கிருந்து அகற்றுமாறு அவர்களிடம் கூறியுள்ளார்.
ஆனால் அவர்கள் அந்த வாகனத்தை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்குப் பதிலாக, ஆசிப்பை திட்டியுள்ளனர். அதைத் தொடர்ந்து கூர்மையான ஆயுதங்களால் ஆசிப்பை தாக்கினர் என்று குற்றம் சாட்டினார். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் ஒரு அற்ப விஷயத்திற்காக ஆசிப்பை இரக்கமின்றி தாக்கினர் என்று ஆசிப்பின் மனைவி மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்து போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு 2 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment