நீரேற்றும் வசதி ஏற்படுத்தி தென்காசி ரெயில் நிலையத்தை ரெயில் முனையமாக மாற்ற வேண்டும்..... மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை
தென்காசி ரெயில் நிலையத்தில் நீரேற்றும் வசதி ஏற்படுத்தி ரெயில் முனையமாக மாற்ற வேண்டும் என மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தலைவர் பாண்டியராஜா, செயலாளர் ஜெகன், நிர்வாகி செபாஸ்டின் ஆகியோர் மதுரை ரயில்வே கோட்ட வர்த்தக பிரிவு, இயக்குதல் பிரிவு மற்றும் பல்வேறு ரயில்வே உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சென்னைக்கு தினசரி ரயில்களே இல்லாத நெல்லை - தென்காசி ரயில் வழித்தடத்தின் வழியாக சென்னைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும், நெல்லையில் இருந்து அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி வழியாக பெங்களுரு மற்றும் கோவைக்கு ரயில்கள் இயக்க வேண்டும், கொல்லம் - நெல்லை இடையே மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கிய பகல் நேர ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும், சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மற்றும் பெங்களுருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும், நெல்லை - தென்காசி இடையே உள்ள ரயில் நிலையங்களில் நடைமேடை நீளத்தை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,
தென்காசி ரயில் நிலையத்தில் நீரேற்றும் வசதி ஏற்படுத்தி ரயில் முனையமாக மாற்ற வேண்டும், நெல்லையிலிருந்து தென்காசி வழியாக விருதுநகர் செல்வதற்கு புறவழி ரயில் பாதை அமைக்க வேண்டும், செங்கோட்டையில் கூடுதலாக ஒரு நடைமேடை அமைக்க வேண்டும், தென்காசி - செங்கோட்டை இடையே இரட்டை அகல ரயில் பாதை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments