முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவினை பரிமாறி தொடங்கிவைத்தார். இத்திட்டம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே பெருத்த வரவேற்றைப் பெற்றது.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 3 லட்சத்து 5 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26-ந்தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த நிலையில் திமுக எம்பி பி.வில்சன், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானை நேரில் சந்தித்து காலை உணவு திட்ட விரிவாக்க விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். இதுதொடர்பாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியாவுக்கே முன்னோடியாகவும், சர்வதேச அளவிலான தரத்துடனும் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க விழாவில் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்கிறார்.
இன்று காலை விழா அழைப்பிதழை பி.வில்சன் எம்பி, பஞ்சாப் முதல்-மந்திரியிடம் நேரில் வழங்கி தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சார்பில் வரவேற்றார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்புமிகு திட்டமான காலை உணவு திட்டம் மூலம் அரசு பள்ளிகள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் வாயிலாக 17 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவியர் சத்தான உணவுடன் கல்வி கற்று வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 26 அன்று இத்திட்டத்தினை நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்து தொடங்கி வைக்கிறது திராவிட மாடல் அரசு!
இந்த திட்டம் மூலம் இனி 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பசியின்றி பாடம் கற்கும் நிலையை உருவாக்கியுள்ளது திராவிட மாடல் அரசு. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment