நாகை நகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர் மற்றும் ஓட்டுநர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் குருசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வெற்றிவேல் அரசு விரைவு போக்குவரத்து கழக சங்க மாவட்ட இணைச் செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசுடைய சங்கம் மாநில செயலாளர் வளர்மாலா கலந்து கொண்டு பேசினார்.
தூய்மை பணியை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவுபடி ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ. 600, ஓட்டுநர்களுக்கு ரூ. 740 வழங்க வேண்டும். தொழிலாளர் வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு பிடித்தம் செய்து முறையாக கணக்குகளை பராமரிக்க வேண்டும். அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் வெங்கடேசன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் முகேஷ், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதி பாஸ் உள்பட தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ஜி. சக்கரவர்த்தி
No comments:
Post a Comment