ஓ.பி.எஸ்.சுக்கு அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், தங்களது கட்சிக்கு தலைமை ஏற்கவும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தென்காசியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரகுநாதன் தெரிவித்தார்.
இது குறித்து அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் ரகுநாதன் தென்காசியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கட்சிக்கு எம்.ஜி.ஆரின் படம் பொறிக்கப்பட்ட கொடி இருந்து வருகிறது. ஜெயலலிதா இருக்கின்ற பொழுதே எம்ஜிஆர் மீது உள்ள பிரியத்தின் காரணமாக இக் கட்சி தொடங்கப்பட்டு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளது.
எம் ஜி.ஆரின் தீவிர தொண்டரான ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை கைப்பற்றுவதற்காக வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்கு முடிவதற்குள் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அமைப்பின் பெயரில் செயல்படுவது நல்லது அல்ல. எனவே அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தை அவர் தலைவர் பொறுப்பேற்று நடத்துவதற்கு மற்றும் தேர்தலை எதிர்கொள்வதற்கும் எங்களது ஆதரவை அவருக்கு முழுமையாக தெரிவித்ததுடன் எங்கள் கட்சிக்கு அவர் தலைமை ஏற்க வேண்டும் என அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
அந்த வகையில் எங்கள் கட்சிக்கு தலைமை ஏற்கும் பட்சத்தில் அவர் தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்க முடியும். 2026 தேர்தலில் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பாக இருக்கும். இது தொடர்பாக கடந்த வாரம் பெரிய குளத்தில் வைத்து இது தொடர்பாக ஓ. பன்னீர் செல்வத்தை நேரடியாக சந்தித்து, எங்கள் கட்சியின் பதிவு, கொடி உள்ளிட்டவைகள் குறித்து விளக்கி உள்ளோம்.; இது குறித்து நல்ல முடிவு எடுப்பதாகவும் கூறியதாக தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment