தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாத இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. 4 முனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி 3 கட்ட மக்கள் சந்திப்பு பயணத்தை முடித்துவிட்டார். தமிழகம் முழுவதும் வலம் வரும் நிலையில், மக்கள் கூட்டம் அதிகம் கூடுவதால் எடப்பாடி பழனிசாமி உற்சாகத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில், செப்டம்பர் 1-ந் தேதி முதல் அவர் 4-வது கட்ட பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். அதையொட்டி, அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.
அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், மாநில நிர்வாகிகள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, காமராஜ், டாக்டர் விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, ஓ.எஸ்.மணியன், எம்.சி.சம்பத், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பணிகளை எவ்வாறு ஆற்ற வேண்டும் என்பது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி விரிவாக ஆலோசனை நடத்தினார். மேலும் அவர் பேசுகையில், ”118 தொகுதிகளுக்கு பிரசாரம் சென்றபோது மக்களிடம் திமுக எதிர்ப்பு அலை உருவாகி உள்ளதை பார்த்தேன். திமுக எதிர்ப்பு அலையை பயன்படுத்தி தேர்தல் பணியை வேகப்படுத்துங்கள்; வாக்காளர் பட்டியலில் இறந்தோர் பெயர், மாற்று இடம் சென்றவர்களை கண்டறிந்து நீக்க கவணம் செலுத்த வேண்டும். 15 பூத் கமிட்டிகளை உள்ளடக்கிய கூட்டங்களை செப்.1-ம் தேதி நடத்த வேண்டும்” என்று அறிவுறுத்தல்களை வழங்கினார்.
முன்னதாக, கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர்., அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
No comments:
Post a Comment