மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை.....பணிச்சுமை காரணமா..? - MAKKAL NERAM

Breaking

Wednesday, August 6, 2025

மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை.....பணிச்சுமை காரணமா..?

 


திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி (வயது 59). இவர் திருவள்ளூர் கோர்ட்டில் வக்கீல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மகன், 3 மகள்கள் உள்ளனர். இவரது 3-வது மகள் திவ்யா (26) வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவம் பயின்றார்.


பின்னர், முதுகலை மருத்துவ படிப்புக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பொது மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். திவ்யா அலைச்சல் மிகுதியால் டி.பி.சத்திரம் பகுதியில் வாடகைக்கு தனியாக அறை எடுத்து மருத்துவக்கல்லூரிக்கு சென்று வந்தார்.


அப்போது உடன்பயிலும் தட்சணாமூர்த்தி என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது. இந்த விஷயம் பெற்றோருக்கு தெரியவர, முதலில் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது. பின்னர் இரு குடும்பத்தாரும் கலந்துபேசி, படிப்பு முடிந்ததும் இருவருக்கும் திருமணம் நடத்திவைப்பதாக தெரிவித்தனர்.


முதுகலை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் செயல்முறை வகுப்புக்காக ஆஸ்பத்திரிகளுக்கு பணிக்காக செல்வது வழக்கம். இந்தவகையில் திவ்யாவும் நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். பின்னர் மதியம் 2 மணிக்கு தனது அறைக்கு சென்றுள்ளார். அங்கு இரவு உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று காலை தட்சணாமூர்த்தி திவ்யாவை செல்போனில் தொடர்பு கொண்டார். திவ்யா அழைப்பை எடுக்காததால் சந்தேகமடைந்த அவர், உடனடியாக அவரது நண்பருடன் அறைக்கு சென்று பார்த்தபோது அறை உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. பின்னர் அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது திவ்யா ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார்.


இதைப்பார்த்து பதறிய தட்சணாமூர்த்தியும், அவரது நண்பரும் டி.பி.சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் அங்கு விரைந்த போலீசார் திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் அந்த அறையை முழுவதுமாக ஆய்வு செய்தனர். கடிதம் எதுவும் சிக்கவில்லை. எனவே, செல்போன் தரவுகளை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


இதுகுறித்து அவரது உறவினர்கள் தெரிவிக்கையில், 'அதிகப்படியான பணிச்சுமை காரணமாகவே திவ்யா தற்கொலை செய்தார்' என்று குற்றம் சாட்டினர்.


இந்நிலையில் இதுதொடர்பாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறுகையில், 'இதுபோன்று எந்த சம்பவங்களும் எங்கள் மருத்துவமனையில் நடைபெறாது. மாணவர்களில் நலனை மட்டுமே நாங்கள் விரும்புகிறோம்' என்றனர்.


இந்த சம்பவம் குறித்து கேள்விபட்டு உடன்பயிலும் மாணவர்கள் பிணவறை அருகே திரண்டு வந்து கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர், திவ்யாவின் பெற்றோரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆறுதல் தெரிவித்தார்.

No comments:

Post a Comment